உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நீர் நிலைகள், விவசாய நிலங்களில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பை

நீர் நிலைகள், விவசாய நிலங்களில் டன் கணக்கில் கொட்டப்படும் குப்பை

கிருஷ்ணகிரி, டிச. 27-கிருஷ்ணகிரி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள், நகரில் உள்ள குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அள்ளும் குப்பையை முறையாக அப்புறப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகரில் சேகரிக்கும் மக்கும், மக்காத குப்பையை தற்போது ஒப்பந்த ஊழியர்கள் யாரும் பிரித்து வாங்குவதில்லை. அனைத்து கழிவுகளையும் ஒன்றாகவே சேகரித்து, நகரின் வெளிப்பகுதியில் சாலையோரம் கொட்டுகின்றனர்.தற்போது கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில், கே.ஆர்.பி., அணையின் பின்புற சாலையோரம், தின்னக்கழனி சாலையோர குடியிருப்பு மற்றும் வயல்வெளி, கங்கலேரி பிரிவு சாலையோரம் டன் கணக்கில் குப்பையை கொட்டி வருகின்றனர். இதில், 75 சதவீதம் பிளாஸ்டிக் கழிவு உள்ளது.இந்த குப்பைக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதோடு, பிளாஸ்டிக் புகையால் பொதுமக்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஒப்பந்த ஊழியர்கள் குப்பையை முறையாக எங்கு கொட்ட வேண்டும் என்ற விதிமுறைகளை நகராட்சியினர் நடைமுறைப்படுத்துவதில்லை. இதனால் நகரில் இறைச்சிக்கடை வைத்திருப்பவர்களும் மூட்டை மூட்டையாக இரவில் சாலையோரம் இறைச்சிக்கழிவுகளை வீசிவிட்டுச் செல்வதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சாலையோரம், குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள், நீர் நிலைகளில் குப்பை கொட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !