கெலவரப்பள்ளி அணையில் துரு பிடித்த கம்பிகள் புதிதாக மாற்றியதால் சுற்றுலா பயணிகள் நிம்மதி
ஓசூர், ஓசூர், கெலவரப்பள்ளி அணையில், துரு பிடித்து மோசமான நிலையிலிருந்த தடுப்பு கம்பிகள் மாற்றப்பட்டதால், சுற்றுலா பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கெலவரப்பள்ளி அணையில், தென்பெண்ணை ஆற்று நீர் சேமிக்கப்பட்டு, உபரி நீர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு ஆற்றில் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து தென்பெண்ணை ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வருவதால், அணை மாசடைந்து, அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ரசாயன நுரையுடன் ஆற்றில் வெளியேறி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.இருந்தாலும், அதிகளவு நுரை வெளியேறி, காற்றில் பறப்பதை வேடிக்கை பார்ப்பதற்காகவும், வீடியோ, புகைப்படம் எடுக்கவும், அணையிலுள்ள படிக்கட்டுகளில் இறங்கி, மதகு பகுதி வரை சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள், தவறி ஆற்றுக்குள் விழாமல் இருக்க, தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை, துருபிடித்து மோசமான நிலையில் இருந்தன.இதை சுட்டிக்காட்டி கடந்த ஆக., மாதம், 21ம் தேதி, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நீர்வளத்துறை நிதி ஒதுக்கி, துரு பிடித்த பழைய கம்பிகளை அகற்றியது. மேற்கொண்டு, சிறிய அளவில் துாண்கள் அமைத்து, அதில் குறுக்காக புதிய கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அணை மதகை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.