இருதரப்பினர் தகராறில் மோதல்; 11 பேர் கைது
கெலமங்கலம், கெலமங்கலம் அருகே காடு உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார், 24. தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் சிவக்குமார், 28, பிறந்த நாளை நேற்று முன்தினம் மேள, தாளங்கள் முழங்க, கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது அவ்வழியாக வந்த சிவராஜ், 53, கேள்வி எழுப்பவே, இருதரப்பினர் பிரச்னையாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பிலும் சிலர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வசந்தகுமார் புகார்படி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்த கெலமங்கலம் போலீசார், சிவராஜ், 53, அவரது மகன் ஸ்ரீகாந்த், 24, மற்றும் கார்த்திக், 22, நவீன், 24, சரண், 22, ரகு, 24, நாகேஷ், 26, சுந்தர், 32, ஆகிய, 8 பேரை, நேற்று கைது செய்தனர். அதேபோல், சிவராஜ் புகார் படி, காடு உத்தனப்பள்ளியை சேர்ந்த திம்மராஜ், 33, முனிராஜ், 32, பிரபாகர், 19, ஆகிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர். வசந்தகுமார், சிவக்குமார், பிரகாஷ், மத்துாரப்பா, 42, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.