ஓசூர் காவேரி மருத்துவமனை சார்பில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி
ஓசூர்: ஓசூர், காவேரி மருத்துவமனை சார்பில், உலக இதய தினத்தையொட்டி, மக்கள் மத்தியில் இதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 15 கி.மீ., சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்ட-லிருந்து துவங்கிய பேரணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்து, குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியருடன் சைக்கிள் ஓட்டி சென்றனர். சிப்காட், டைட்டன் ஜூவல்லரி, தர்கா வழியாக சென்ற பேரணி, மீண்டும் ஹில்ஸ் ஓட்டலை வந்தடைந்தது.முன்னதாக, காவேரி மருத்துவமனை இருதய மருத்துவர்கள் பிரசன்னா, அருள் ஞானசண்-முகம் ஆகியோர், உடற்பயிற்சி அவசியம் குறித்தும், மது, புகைபிடித்தல் போன்ற பல்வேறு தீய பழக்கத்தால் ஏற்படும் இதய பாதிப்புகள், மாரடைப்பு பற்றியும் விளக்கமளித்தனர். ஓசூர் காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குனர் அரவிந்தன், பொதுமேலாளர் ஜோஷ் வர்கீஸ் ஜாய், உதவி பொது மேலாளர் பிந்துகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீராமஜெயம் உட்பட பலர் பங்கேற்றனர்.