மதுரை ; மதுரையில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் 23 ஆயிரத்து 160 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.தமிழகம் முழுவதும் வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்டுகள், ஸ்டெனோகிராபர், பில்கலெக்டர், வனக்காவலர், வனக்கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது. இதற்காக மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு தாலுகாவில் 91, கிழக்கில் 22, தெற்கில் 72, மேற்கில் 25 மையங்கள் உட்பட ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் பங்கேற்கும் வகையில் 393 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இம்மையங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.வருவாய்த்துறை, கருவூலத்துறை அதிகாரிகள் கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ., சக்திவேல் தலைமையில் தேர்வை கண்காணித்து நடத்தினர். இத்தேர்வை 84 ஆயிரத்து 564 பேர் (78.5 சதவீதம்) எழுதினர். தேர்வில் 23 ஆயிரத்து 160 பேர் (21.5 சதவீதம்) பங்கேற்கவில்லை. மதுரை எம்.கே.புரம், நாகமலைபுதுக்கோட்டை உட்பட பல மையங்களில் ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்தோரை மையத்திற்குள் அனுமதிக்கவில்லை என சலசலப்பு எழுந்தது. தேர்வில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: 'கட்ஆப்' உயர வாய்ப்பு
வல்லரசு, வில்லாபுரம், மதுரை: இத்தேர்வுக்காக மாநகராட்சி பூங்காவில் அமர்ந்து 2 ஆண்டுகளாக படித்து வந்தேன். தேர்வு எளிதாக இருந்தது. அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக விடையளிக்க முடிந்தது. எனவே இம்முறை கட்ஆப் மதிப்பெண் உயரக்கூடும் என நினைக்கிறேன். பாடதிட்டத்துக்கு உட்பட்டுதான் அனைத்து கேள்விகளும் வந்தன. பள்ளிப் புத்தகங்களை மட்டும் படித்திருந்தாலே போதும். பொதுஅறிவுப் பகுதி கடினம்
ரமேஷ், தெற்குவாசல், மதுரை: இத்தேர்வில் கணிதம், தமிழ் பகுதிகள் எளிதாக இருந்தன. பொது அறிவு வினாக்களை சற்று கடினமாக உணர்ந்தேன். 6 - 10ம் வகுப்பு பள்ளிப் பாட புத்தகங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 4 மாதங்களாக இத்தேர்வுக்கு தயார் படுத்திக் கொண்டேன். 165 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்பார்க்கிறேன். இரண்டு விடைகள்
இந்துமதி, சிம்மக்கல், மதுரை: நான் கல்லுாரி முடித்து டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்காக படித்து வருகிறேன். இது எனது 2வது முயற்சி. தேர்வு சற்றே கடினமாக இருந்தது. கணக்கு பகுதியில் 2 கேள்விகளுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை. பொது அறிவுப் பகுதியில் பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி வினாக்கள் கேட்கப்பட்டன. தமிழ் பகுதியில் ஒரு கேள்விக்கு இரண்டு ஆப்ஷன்களும் சரியாக உள்ளது. மாதிரித் தேர்வுக்கு மட்டும் வெளியில் பயிற்சி எடுத்துக் கொண்டேன். பயம் நீங்கியது
ரேஷ்மா, எஸ்.எஸ்.காலனி, மதுரை: இத்தேர்வை 2வது முறையாக எழுதினேன். கடந்தாண்டு முதல் இத் தேர்வுக்கு தயாராகி வந்தேன். முதல் முறை கேள்விகள் குறித்த பயம் இருந்தது. இம்முறை கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. பழைய புத்தகத்தில் இருந்து வினாக்கள் அதிகம் வந்தது. தமிழில் இலக்கணம் சற்று கடினம். பொது அறிவியல் எளிதாக இருந்தது. வரலாறு வினாக்கள் அதிகம் இருந்தன. இம்முறை 300க்கு 180 மதிப்பெண்கள் எதிர்பார்க்கிறேன்.