51 முதல்வர் மருந்தகங்கள் மதுரையில் திறப்பு
மதுரை: மதுரை மாவட்டத்தில் 51 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.மதுரை ஷெனாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் பங்கேற்று குத்து விளக்கேற்றி துவக்கினர். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், கூட்டுறவு இணைப்பதிவாளர்கள் சதீஷ்குமார், மனோகரன், வாஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 20 மருந்தகங்கள், தொழில் முனைவோர் மூலம் 31 மருந்தகங்கள் என மொத்தம் 51 மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இம்மருந்தகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 லட்சம், தொழில் முனைவோருக்கு ரூ.1.50 லட்சம் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதே அளவுக்கு மானியமாக மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.இம் மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சித்தா, யுனானி, இந்திய மருந்துகள், சர்ஜிக்கல் பொருட்களும் கிடைக்கும். ஜெனரிக் மருந்துகள் 20 முதல் 90 சதவீதம் வரை விலைமலிவாகவும், 25 சதவீதம் தள்ளுபடி விலையிலும் விற்பனை செய்யப்படும்.அலங்காநல்லுார்: இங்கு ள்ள கேட் கடை பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர்கள் ரகுபதி, மனோகர்வேல் பாண்டியன், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் சேஷா வரவேற்றார். ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், பேரூராட்சி துணைத் தலைவர் சுவாமிநாதன், கூட்டுறவு செயலாளர் சாந்தி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.