உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கபடி விளையாட்டுக்கு தேவை பல்நோக்கு உள்விளையாட்டரங்கு

கபடி விளையாட்டுக்கு தேவை பல்நோக்கு உள்விளையாட்டரங்கு

மதுரை : தமிழகத்தில் கபடி விளையாட்டுக்கு என பல்நோக்கு விளையாட்டு அரங்கு அமைக்க வேண்டும் என மதுரையில் தமிழ்நாடு கபடி சங்கத்தலைவர் சோலைராஜா தெரிவித்தார்.அவர் கூறியது: ராஜஸ்தானைச் சேர்ந்த ஜனார்த்தன்சிங் சர்வதேச கபடி கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது ஒலிம்பிக் போட்டியில் கபடியை சேர்க்க முயற்சி செய்தார். அவர் மறைவுக்கு பின் மீண்டும் முயற்சி செய்கிறோம். ஆசிய நாடுகளில் கபடி விளையாட்டு பிரபலமாக இருந்தாலும் ஆஸ்திரேலியா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் நாடுகளில் இப்போது தான் பிரபலமாகி வருகிறது. வாலிபால், கூடைப்பந்து போல எல்லா நாடுகளிலும் கபடி விளையாடப்படவில்லை. குறிப்பிட்ட நாடுகளின் எண்ணிக்கை பட்டியல் ஆதரவு இருந்தால் தான் ஒலிம்பிக்கில் கபடி போட்டியை சேர்க்க முடியும். சமீபத்தில் சீனாவில் நடந்த ஆசிய கபடி போட்டியின் ஆண், பெண் பிரிவுகளில் இரு தங்கப்பதக்கம் வென்றோம்.தேவை சர்வதேச உள்விளையாட்டு அரங்கு:மதுரை தான் தென்மாவட்ட கபடி விளையாட்டுக்கு தலைநகராக உள்ளது. மதுரை அல்லது சேலம், திருச்சி என எந்த மாவட்டத்தில் இடம் உள்ளதோ அங்கே சர்வதேச உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மாநில, தேசிய, சர்வதேச போட்டிகள் நடத்தும் அளவுக்கு 'இன்டோர்' அரங்கு, 2000 பேர் அமரும் காலரி வசதியுடன் இருக்க வேண்டும். உள்ளேயே மருத்துவ வசதி, 500 பேர் தங்கும் வகையில் 'டார்மெட்ரி' அறைகள், கேண்டீன், மெஸ், மருத்துவ வசதியும் 'இன்டோர்' வளாகத்தில் அமைக்க வேண்டும்.சென்னை நேரு ஸ்டேடியத்தில் மட்டும் தான் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. ஆனால் அங்கு விளையாட்டு நடப்பதை விட வாடகைக்கு தான் அதிகம் விடப்படுகிறது.தமிழகத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் இப்படியொரு பிரமாண்ட உள்விளையாட்டு அரங்கு அமைத்தால் போதும். கபடி மட்டுமல்ல வாலிபால், கூடைபந்து, பாட்மின்டன், கோகோ என அனைத்து விளையாட்டுகளையும் 'இண்டோரில்' நடத்த முடியும். அந்தந்த போட்டிக்கான வலை அமைப்பை மட்டும் மாற்றினால் போதும். கடந்த அ.தி.மு.க, ஆட்சியிலும் உதவி கேட்டோம். இப்போதுள்ள அரசிடமும் உதவி கேட்டோம். விளையாட்டுக்கு யாரும் முக்கியத்துவம் தரவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ