பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு எதிராக மேல்முறையீடு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை : பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.மதுரை சித்தன் தாக்கல் செய்த மனு: மதுரை மேற்கு 6 ம் பகுதி அ.தி.மு.க.,செயலாளராக உள்ளேன். மாநகராட்சி விளாங்குடி 20 வது வார்டு காமாட்சி நகரில் எம்.ஜி.ஆர்., மன்றம் அருகே அ.தி.மு.க.,கொடிக் கம்பத்தை புதிதாக நிறுவ அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மேலும் சில மனுக்கள் தாக்கலாகின.ஜன.,27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு: தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை நிரந்தரமாக நிறுவ அனுமதிக்க போலீஸ், வருவாய்த்துறைக்கு சட்டத்தில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்.பொது இடங்களில் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை நிரந்தரமாக நிறுவ அரசு அனுமதியளிக்கக்கூடாது. தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம், நிகழ்ச்சிகளின் போது பொது இடங்களில் கொடிக் கம்பங்களை தற்காலிக அடிப்படையில் நிறுவ சம்பந்தப்பட்ட கட்சிகள், அமைப்புகளிடம் வாடகையை அரசு வசூலித்து அனுமதியளிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் அம்மாவாசிதேவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: கொடிக்கம்பம் நிறுவ அனுமதி கோரிய வழக்கில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. ஏற்கனவே மற்றொரு தனி நீதிபதி கொடிக் கம்பம் நிறுவ அனுமதித்துள்ளார். இரு தனி நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீதிபதி இளந்திரையனின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பு: கட்சிகள், சங்கங்களை துவக்குவது அடிப்படை உரிமை. அவற்றின் கொள்கை, கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல கொடிக் கம்பங்களை நிறுவுவதும் அடிப்படை உரிமை.அரசு தரப்பு: கொடிக் கம்பங்கள் நடுவது ஜனநாயக உரிமை. மற்ற மாநிலங்களில் கொடிக் கம்பங்கள் உள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தே கொடிகள் நடும் நடைமுறை இருந்தது.நீதிபதிகள்: பொது இடங்களில் யாரும் கொடிக் கம்பங்கள் நடக்கூடாது. இதனால் ஏற்படும் விபத்துக்களால் மக்கள் இழப்புகளை சந்திக்கின்றனர். கட்சிகளின் அலுவலகங்களில் கொடிக் கம்பங்களை நிறுவலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் தனி நீதிபதி இளந்திரையனின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.