உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிலோ கணக்கில் வாழைத்தாருக்கு விலை வேண்டும்; ஓராண்டு உழைப்பு வீணாவதாக விவசாயிகள் வேதனை

கிலோ கணக்கில் வாழைத்தாருக்கு விலை வேண்டும்; ஓராண்டு உழைப்பு வீணாவதாக விவசாயிகள் வேதனை

மாவட்டத்தில் வாடிப்பட்டியில் அதிகபட்சமாக950 எக்டேரிலும் மேலுாரில் 650, திருப்பரங்குன்றத்தில் 580, அலங்காநல்லுாரில் 280, மதுரை மேற்கில் 180, திருமங்கலத்தில் 150, மதுரை கிழக்கு, கொட்டாம்பட்டி, டி.கல்லுப்பட்டியில் தலா 120 எக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடியாகிறது. கன்று நடவு செய்து ஓராண்டு காத்திருந்து வாழைத்தார் அறுவடை செய்யும் போது உரிய விலை கிடைப்பதில்லை என வாழை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:ஒரு தாரில் எவ்வளவு பழங்கள் இருந்தாலும் எடையை கணக்கிடாமல் அடிமாட்டு விலைக்கே வியாபாரிகள் வாங்குகின்றனர். ஓராண்டு வரை உழைத்து அறுவடை செய்த தார் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.250 கொடுத்து விட்டு ஒரு சில நாட்களில் 3 மடங்கு லாபம் பெறுகின்றனர். மதுரை மாவட்டத்தில் பயிரிடப்படும் பூவன் தார் ஒன்றில் 250 பழங்கள், ரஸ்தாளி ரகத்தில் 120, ஒட்டு வாழையில் 150 பழங்கள் இருக்கும். வாழைக்கு அன்றாட விலை தான் நிர்ணயிக்கப்படுகிறது. முகூர்த்தம், விசேஷங்களின் போது மட்டும் தரமான ரஸ்தாளி தாருக்கு ரூ.600, ஒட்டுவாழை, பூவனுக்கு ரூ. 200 - ரூ.250 தருகின்றனர். இதில் ஏற்றுகூலி, இறக்கு கூலி, போக்குவரத்து வாடகை அனைத்தும் சேர்க்க வேண்டியுள்ளது. மற்ற நாட்களில் சராசரியாக எந்த வாழை ரகத்திற்கும் ரூ.300க்கு மேல் வியாபாரிகள் எங்களுக்கு தருவதில்லை.கலெக்டராக அனீஷ்சேகர் இருந்த போது சோதனை அடிப்படையில் எடை கணக்கில் விற்கும் முறையை கொண்டு வந்தார். அதன் பின் மீண்டும் தார் கணக்கில் தான் தற்போது வரை விற்கப்படுகிறது. எடை கணக்கில் விற்கும் போது கேரளாவில் உள்ள விலை நிலவரத்தை கணக்கிடுவர். ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் எடை கணக்கில் தான் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை மூலம் விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களும் மறைமுக ஏலம் மற்றும் தேசிய மின்னணு (இ - நாம்) சந்தை மூலம் நியாயமான லாபத்திற்கு விற்றுத் தரப்படுகிறது. வாழை விவசாயிகளுக்கு மட்டும் விமோசனம் கிடைக்கவில்லை. அதையும் கிலோ கணக்கில் வேளாண் விற்பனைத்துறை விற்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை