| ADDED : ஜூலை 26, 2024 06:36 AM
அலங்காநல்லுார்: தேர்தலுக்குப் பின் 3 மாதங்களாக பஸ் வராததால் அலங்காநல்லுார் அருகே குறவன்குளம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.பாலமேடு ரோட்டில் சின்ன ஊர்சேரி பிரிவில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் இக்கிராமம் உள்ளது. தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை 4 முறை பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது. காலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் இந்த பஸ்சை நம்பி உள்ளனர்.கடந்த காலங்களிலும் அடிக்கடி நாட்கணக்கில் பஸ்சை நிறுத்தி விடுவது வழக்கம். கூட்டம் குறைவாக இருந்தால் குறவன்குளம் வராமல் அலங்காநல்லுார் கேட்கடை அல்லது சின்னஊர்சேரி பிரிவில் இறக்கிவிட்டுச் செல்வர் என கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.கல்லுாரி மாணவர் ஜெயகணேஷ் கூறியதாவது: இக்கிராமத்திற்கு ஷேர் ஆட்டோ வசதியும் இல்லை. பஸ் வராதது குறித்து மாணவர்கள் மதுரை டெப்போ அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஒருபுறம் பஸ் பற்றாகுறை என்கின்றனர். மற்றொரு புறம் புதிய பஸ்களை இயக்கிவைப்பதாகக் கூறுகின்றனர் என்றார்.ஞானம் என்பவர் கூறுகையில், ''இந்த பஸ்சை நம்பித்தான் குழந்தைகளை மதுரை நகர் பள்ளி, கல்லுாரிகளில் படிக்க வைக்கிறோம். தற்போது பஸ் வராததால், மாலை, இரவு நேரங்களில் மாணவிகளை 3 கி.மீ., நடந்து சென்று அழைத்து வர வேண்டியுள்ளது. இதனால் அச்சமுடன் உள்ளோம், என்றார்,