| ADDED : ஜூலை 29, 2024 07:08 AM
அவனியாபுரம்: ''தமிழக அரசின் தோல்விகளை திசை திருப்புவதற்காகவே மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்,'' என, பா.ஜ., தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டினார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காததை கண்டிக்கிறேன். இது மக்களுக்கு எதிரானது. அவர் அரசியல் காரணங்களுடன் செயல்பட்டது நியாயம் அல்ல. இதுதான் திராவிட மாடலா. ஓட்டு வங்கிக்காகவே இதை செய்கின்றனர். தமிழக வளர்ச்சிக்காக ரூ. பல லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் தோல்விகளை திசை திருப்பவே முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை குற்றம் சாட்டுகிறார்.தமிழகத்தில் கட்சித் தலைவர்கள் கொலை உட்பட பல கொலைகள் நடந்துள்ளன. இந்த அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துள்ளது. முதல்வர் அதில் கவனம் செலுத்த வேண்டும்.'நீட்' தேர்வை இண்டியா கூட்டணி முற்றிலும் புறக்கணிக்கிறது. ஆனால் கடந்தாண்டு நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்விலும் வினாத்தாள் கசிந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் 9 பேரை கைது செய்தனர். பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தி நெருங்குவதையொட்டி, ஏழைகள் விநாயகர் சிலை தயாரித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். போலீசார் அங்கும் சென்று பிரச்னை செய்கின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் உயிரிழந்தனர். மக்கள் இதற்கு நிச்சயம் பதிலளிப்பர். 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைக்கும்.மத்திய அரசின் சிறந்த பட்ஜெட். மக்களுக்கான பட்ஜெட். பெண்கள், ஏழை மக்கள், இளைஞர் நலன் மற்றும் விவசாயிகள் நலனுக்கான பட்ஜெட் இது. இதேபோல தமிழக பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதா. தி.மு.க., வின் மூன்று முகங்களாக கட்டப்பஞ்சாயத்து, பொய் வழக்குகள், ஊழல் உள்ளது. முதல்வர் ஓட்டுக்காக, மத்திய அரசை குற்றம் சாட்டும் அரசியலை செய்யாமல், மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.