உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காட்சி மாறாத மாநகராட்சி கூட்டங்கள்; பதில் உண்டு... தீர்வுதான் இல்லை...

காட்சி மாறாத மாநகராட்சி கூட்டங்கள்; பதில் உண்டு... தீர்வுதான் இல்லை...

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாதந்தோறும் கவுன்சில் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் 100 வார்டுகளிலும் உள்ள கவுன்சிலர்கள் தங்களின் வார்டு, மக்கள் பிரச்னைகளை மேயர், கமிஷனர் கவனத்திற்கு கொண்டு தீர்வு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வர். நேற்றுமுன்தினம் (ஜூலை 29) நடந்த 41வது கூட்டத்திலும் பலர் தங்கள் வார்டுகளுக்கு தேவையான திட்டங்கள், கோரிக்கைகள் குறித்து பேசினர். கவுன்சிலர்கள் கார்த்திகேயன் (காங்.,), மாலதி, நாகநாதன், நுார்ஜஹான், (தி.மு.க.,), விஜயா (மா.கம்யூ.,) பாஸ்கரன் (ம.தி.மு.க.,) உள்ளிட்ட கவுன்சிலர்கள் 'பல கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். ஆனால் நடக்கவில்லை' என்றனர். இதுபோல் அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா ஒவ்வொரு கூட்டத்திலும் நகரில் உள்ள 16 பிரதான கால்வாய்கள் எப்போது துார்வாரப்படும், பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்பு, மாற்று மோட்டார் வசதி குறித்த கேள்விகளை அடிக்கடி எழுப்புகிறார். சில கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் கோரிக்கைகள் நிறைவேற்றியதற்காக மேயர், கமிஷனருக்கு நன்றி தெரிவிக்கின்றனர். ஆனாலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. கவுன்சிலர் நாகநாதன் கூறியதாவது: கூட்டத்தில் கவுன்சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும். 'நகரமைப்பு பிரிவில் 2024 ல் போலி காசோலை கொடுத்து கட்டட வரைபட அனுமதி பெற்ற கட்டட வரையாளர்கள் (எல்.பி.எஸ்.,) மீது ஏன் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை' என தொடர்ந்து 9 கூட்டங்களில் கேள்வி எழுப்பினேன். 'நடவடிக்கை எடுக்கப்படும்' என இதுவரை பதில் அளிக்கப்பட்டது. இம்மாதம் அந்த கேள்விக்கு 'அனைத்தும் ஆன்லைன் பேமென்ட் என்பதால் அது போன்ற தவறு நடக்கவில்லை' என பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல. போலீசில் புகார் கொடுக்க உள்ளேன். இனிமேல் நடக்கும் கூட்டங்களிலாவது கேள்விகளுக்கு நேரடி பதில் வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை