வெற்றி, தோல்வி அடைந்தாலும் முயற்சி முக்கியம்: நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேச்சு
மதுரை; ''வாழ்க்கையில் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு இந்த மூன்றும் முக்கியமானவை. வெற்றி, தோல்வி அடைந்தாலும் முயற்சி முக்கியம்'' என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசினார்.மதுரை தியாகராஜர் கல்லுாரியில் 76ம் ஆண்டு கல்லுாரி தின விழா நடந்தது. தலைவர் உமா கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஹரி தியாகராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசியதாவது: நமது வாழ்க்கையை நாமே அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும். நமக்காக வாழ்வதை விட மற்றவருக்காக வாழும்போது அர்த்தம் உண்டு. காலம் யாருக்காகவும் நிற்காது. இயற்கையும், உணர்வும் அனைவருக்கும் சமம். இதில் செல்வம், பதவி, பெயர், புகழ் என இருக்கிறதெல்லாம் நமக்கு என்று நினைக்கக்கூடாது. அனைவருக்கும் கொடுத்து வாழ வேண்டும்.கல்லுாரியில் புத்தக கல்வி மட்டுமல்ல வாழ்க்கையையும் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்தும் ஏற்க பழகிக்கொள்ள வேண்டும். நீதிக்காக வாழ்ந்த மொழி தமிழ். தமிழ்வழிக் கல்வியில் படித்து தான் நீதிபதியாகியுள்ளேன். ஒவ்வொரு படைப்பிலும் தனித்துவம் உண்டு. அதற்கு காரணமும் உண்டு. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றில்லை. வாழ்க்கையில் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு இந்த மூன்றும் முக்கியமானவை. வெற்றி, தோல்வி அடைந்தாலும் முயற்சி முக்கியம். தோல்வி தான் நம்மை அடுத்த படிக்கு எடுத்துச் செல்லும். எனவே வெற்றி, தோல்வி சமமாக பார்க்க வேண்டும் என்றார்.பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். முதல்வர் பாண்டிராஜா, நீதிபதி மனைவி சுபா, விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் சங்கர சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.