கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் தொடர்ந்து முறையிடும் விவசாயிகள்
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.விவசாயிகள் கூறியதாவது: நாளை (செப்.15) தண்ணீர் திறக்க உள்ள நிலையில் இதுவரை நீர்வரத்து கால்வாய் மற்றும் கண்மாய்கள் பராமரிக்கவில்லை. பெரிய அருவி அணையின் உள்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கேசம்பட்டி பகுதியில் உள்ள 70 கிராமங்களுக்கு பெரியாற்று கால்வாய் தண்ணீரை அழகர்கோவில் வழியாக கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயை மராமத்து பார்க்க வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வராத குறிப்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரம், விதை மற்றும் வங்கி கடன் குறித்து விவசாயிகளுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை.வண்டல் மண் அள்ளுவதில் நீர்வளத்துறையினர் குளறுபடி செய்கின்றனர். விளை நிலத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு பிளாட்டுகளுக்கு விற்பதை நீர்வளத்துறை மற்றும் பி.டி.ஒ., க்கள் கண்டு கொள்ளவில்லை. கள்ளந்திரி, புலிப்பட்டியில் நீர்அளவீடு கருவியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யவில்லை. இதனால் ஒரு போகத்திற்கு உரிய அளவு தண்ணீர் கிடைக்காது. கால்வாயினுள் கலக்கும் கழிவுநீரை நகராட்சி நிர்வாகத்தினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.விவசாயிகள் பழனிசாமி, மணி, கிருஷ்ணன், ரவி, சாகுல்ஹமீது, அருண், துரைச்சாமி, செல்வராஜ், பாண்டி, அடைக்கிவீரணன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.