உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மண் எடுக்க பொம்மையாக ஆட்டுவிக்கிறாங்க... விளாச்சேரி தொழிலாளர்கள் அவதி

மண் எடுக்க பொம்மையாக ஆட்டுவிக்கிறாங்க... விளாச்சேரி தொழிலாளர்கள் அவதி

திருநகர்: மதுரை விளாச்சேரி கண்மாயில் களிமண் எடுக்க அனுமதி இன்றி, அருகிலுள்ள கண்மாய்களுக்கு மண் எடுக்க செல்வதால், பொம்மைத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சீசனுக்கு ஏற்றார்போல் நவராத்திரி கொலு பொம்மைகள், சுவாமி சிலைகள், பத்தடி உயர மெகா விநாயகர் சிலைகள், அகல் விளக்குகள், கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரிக்கின்றனர். இவை தமிழக கோயில்கள், வெளி மாநிலங்களில் விற்பனைக்கு செல்கின்றன. வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. பொம்மைகள் தயாரிக்கும் ராமலிங்கம், பிச்சை, ஆறுமுகம் கூறியதாவது: பொம்மைகள் தயாரிக்க மட்டுமே விளாச்சேரி கண்மாயில் பாரம்பரியமாக களிமண் எடுத்து வருகிறோம். 3 ஆண்டுகளாக களிமண் எடுக்க அரசு அனுமதிக்கவில்லை. அருகே துவரிமான் உள்ளிட்ட பகுதி கண்மாய்களில் களிமண் எடுக்க அனுமதி கொடுத்துள்ளனர். அதற்கு போக்குவரத்து, வேன் வாடகை செலவுகள் அதிகம். ஆங்காங்கே கண்மாய்களில் மண் எடுக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் மூன்று ஆண்டுகளாக பொம்மை தயாரிப்பில் சுணக்கம் ஏற்பட்டு, வருமான இழப்பை சந்தித்து வாழ்வாதாரம் பாதித்துள்ளது. விளாச்சேரி கண்மாய் மண்தான் பொம்மை தயாரிக்க சிறப்பானதாக இருக்கும். விளாச்சேரி பொம்மைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளோம். தற்போது வேறு கண்மாய் மணல் மூலம் பொம்மை தயாரிப்பதால் புவிசார் குறியீடு கிடைப்பது கேள்விக்குறிதான். விளாச்சேரி கண்மாயில் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை