| ADDED : ஜூன் 13, 2024 06:17 AM
மதுரை: துாத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த 28 வயது கர்ப்பிணிக்கு வந்த அரிய வகை 'நோடோபதி' நரம்பியல் நோயை தொடர்ந்து 6 மாத சிகிச்சையின் மூலம் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்குணப்படுத்தினர்.உலகத்தில் 4 முதல் 8 சதவீத பேருக்கு மட்டுமே வரும் அரிய வகை நரம்பியல் நோயை குணப்படுத்தியது குறித்து டீன் தர்மராஜ் கூறியதாவது: நமது உடலுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி செயல்படுவது தான் இந்நோய்க்கு காரணம். மூட்டுவாதம் போல தசைகளுக்கு எதிராக வரும் நோய் இது. எட்டாவது மாதம் வரை இயல்பாக இருந்த கர்ப்பிணிக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அவருக்கு 'இம்யூனோ குளோபுலின்' மருந்துகளை (ஐ.வி.ஐ.ஜி.) செலுத்தி குணப்படுத்தினோம். மீண்டும் பிரசவ நேரத்தில் இதே பிரச்னை வந்தபோதும் இந்த மருந்துகளின் மூலம் சரிசெய்தோம். குழந்தை பிறந்தபின் மீண்டும் கை, கால்கள் செயலிழந்ததால் நரம்பு மண்டல பரிசோதனை செய்த போது மிகவும் அரிதான 'நோடோபதி' நோயின் தாக்கம் கண்டறியப்பட்டது.இந்நோய்க்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான 'ரிட்டுக்ஸிமாப்' மருந்துகள் செலுத்திய நிலையில் அந்த பெண் இயல்பாக நடமாடுகிறார். குழந்தையும் தாயும் நன்றாக உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சையும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் வெங்கடேஸ்வரன், ஜஸ்டின், செழியன், செந்துார், இளங்கோ, முருகன் சிகிச்சைக்கு உதவினர் என்றார். ஆர்.எம்.ஓ. ஸ்ரீலதா, மருத்துவ கண்காணிப்பாளர் பொறுப்பு செல்வராணி உடனிருந்தனர்.