பா.ஜ., நிர்வாகிக்கு போக்சோ வழக்கில் ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : போக்சோ வழக்கில் கைதான பா.ஜ.,மாநில பொருளாதார பிரிவு தலைவர் சாகிர்ஷா (எ) எம்.எஸ்.ஷாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது.ஷாவிற்கு எதிராக 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை தெற்கு மகளிர் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அதில்,'தனது மகளின் அலைபேசிக்கு ஷாவின் அலைபேசியிலிருந்து ஆபாசமான உரையாடல்கள் வந்தது. ஷா முதலில் எனது மனைவியிடம் உங்கள் கடனை அடைத்து விடுகிறேன் எனக்கூறி தகாத உறவில் இருந்துள்ளார். மனைவி மூலம் மகளையும் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதற்கு எனது மனைவியும் உடந்தை. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிட்டார். ஷா, மாணவியின் தாய் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.ஷாவை ஜன.13 ல் போலீசார் கைது செய்தனர். அவர் உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஆர்.சக்திவேல்: கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர் மறு உத்தரவு வரும்வரை சென்னையில் தங்கி எழும்பூர் போலீசில் தினமும் மாலை 5:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.