உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு பள்ளி நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் அவமதிப்பு நடவடிக்கை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அரசு பள்ளி நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் அவமதிப்பு நடவடிக்கை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை: மதுரை கிழக்கு தாலுகா மீனாட்சிபுரத்தில் அரசு பள்ளி அமைந்துள்ள நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்தது.மதுரை கிழக்கு தாலுகா மீனாட்சிபுரம் தனுஷ்கோடி தாக்கல் செய்த பொதுநல மனு: மீனாட்சிபுரம் காந்தி நகரில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலம் நீர் பிடிப்புப் பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அரசு பள்ளி உள்ளது. குறிப்பிட்ட பகுதியை மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்துகின்றனர். சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு தரப்பு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அகற்ற நடவடிக்கை கோரி கலெக்டர், மேலுார் ஆர்.டி.ஓ., மதுரை கிழக்கு தாசில்தாருக்கு 2018 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது ஷபீக் அமர்வு:மனுவை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கையை தாசில்தார் 12 வாரங்களில் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றத் தவறினால் தீவிரமாக பார்க்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ