| ADDED : ஜூலை 01, 2024 04:14 AM
மதுரை : ''தமிழக ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் கணக்காளர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம், பணிபாதுகாப்பு அளித்து தனிநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,'' என, மதுரையில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்க மாநில தலைவர் சார்லஸ் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: மாநிலத்தில் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் பணிபுரியும் வி.பி.ஆர்.சி., பி.எல்.எப்., கணக்காளர்களுக்கு (கிராம வறுமை ஒழிப்பு) அடையாள அட்டை, இன்சூரன்ஸ் திட்டம் வழங்கிட வேண்டும். பணிபாதுகாப்பு அளித்து தனி நிதி ஒதுக்கீடு செய்து மாதச்சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். வட்டார மேலாளர், ஒருங்கிணைப்பாளர்களை நிரந்தரம் செய்து, மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்களை அரசு பணியாளர்களாக்கி சலுகைகளை வழங்க வேண்டும். திருச்சியில் நடந்த மாநில கலந்தாய்வு கூட்டத்தில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைப்பாளர் குமரேசன், தமிழ் மாநில அரசு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கணேசன், ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ரங்கராஜ், அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் பெரியசாமி, மாநில தலைவர் மணிராஜ் உட்பட பலர் பேசினர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆக., 9 கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்த உள்ளோம் என்றார்.