பிளஸ் 2 தேர்வு முறைகேடு பெற்றோர் ஜாமின் மனு; உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
மதுரை : மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒரு மாணவனின் பெற்றோர் ஜாமின் அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.மதுரையில் 2023 மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டபோது, ஒரு தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே கையெழுத்தில் இருந்தன.சிவகங்கை மாவட்ட விடைத்தாள் திருத்தும் முகாமில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 மாணவர்களும் இயற்பியல் உட்பட 3 பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர். தேர்வில் முறைகேடு செய்துள்ளதால் ஒரு மாணவர் எழுதிய அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும், 5 ஆண்டுகளுக்கு தேர்வில் பங்கேற்க ஏன் தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கோரியும் அரசு தேர்வுகள்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிராக அம்மாணவனின் தந்தை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். 2023 அக்.30 ல் தனிநீதிபதி,'மனுதாரரின் மகனிடம் அரசு தேர்வுகள்துறை விசாரிக்க வேண்டும். தேர்வில் பங்கேற்க தடை விதிக்கலாமா அல்லது தொடர்ந்து தேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேர்வு முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார்.இவ்வழக்கில் ஒரு மாணவரின் பெற்றோரான இளஞ்செழியன், அவரது மனைவி வனிதா, மற்றொரு மாணவரின் பெற்றோரான மதுரை விநாயகமூர்த்தி, கார்த்திகா மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சில அலுவலர்களை சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஜூலையில் கைது செய்தனர்.விநாயகமூர்த்தி, கார்த்திகா உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: சம்பந்தப்பட்ட மாணவனை மீண்டும் தேர்வு எழுத அனுமதித்ததில் கணிதம், கணினி அறிவியலில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். பிற பாடங்களில் அதிக மதிபெண் பெற்றுள்ளார். முறைகேடு நடக்கவில்லை.அரசு தரப்பு: கால அவகாசம் தேவை.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி செப்.,6 க்கு ஒத்திவைத்தார்.