| ADDED : ஜூன் 13, 2024 05:32 PM
மதுரை:மதுரை மாவட்டம் குமாரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ், 69. வட்டார போக்குவரத்து அலுவலக புரோக்கராகவும், சட்ட விரோத கஞ்சா விற்பனையாளராகவும் உள்ளார். இவர் கஞ்சா விற்பதாக போலீஸ் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. வாடிக்கையாளர் ஒருவர் மூலம் சுப்புராஜை வரவழைத்து விசாரித்தபோது, மத்திய போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு ஏட்டு பாலமுருகன், 50, என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்தார். இதை உறுதிசெய்ய சுப்புராஜ் மூலம் பாலமுருகனிடம் போலீசார் தொடர்பு கொண்டு 2 கிலோ கஞ்சா கேட்டனர்.ஆத்திக்குளம் மெயின் ரோட்டில் கஞ்சாவுடன் வந்த பாலமுருகனை கைது செய்து விசாரித்தபோது, பல ஆண்டுகளாக, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட பறிமுதல் கஞ்சா, போதைப்பொருளை கிலோ கணக்கில் விற்று வந்தது தெரிந்தது.இதைதொடர்ந்து சுப்புராஜ் வீட்டில் சோதனையிட்டு ஏற்கனவே பாலமுருகன் விற்ற ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்ற பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறியதாவது: பாலமுருகன் போலீஸ் பணியில் 2002ல் சேர்ந்தார். 2022 முதல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவில் பணியாற்றி வருகிறார். கோர்ட் வழக்குகளை பார்த்து வந்தார். அப்போது கோர்ட்டில் கஞ்சா வழக்கில் ஆஜராக வந்த சுப்புராஜ் உடன் அறிமுகம் ஏற்பட்டது.பறிமுதல் கஞ்சாவை கோர்ட்டில் ஒப்படைத்த பின் மீண்டும் போலீசாரிடம் அவை ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அப்படி பாதுகாக்கப்படும் கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக கிலோ கணக்கில் சுப்புராஜ் மூலம் வெளிச்சந்தையில் பாலமுருகன் விற்று வந்துள்ளார். இது, அப்பிரிவில் பணியாற்றும் சக போலீசாருக்கும் தெரியுமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.