உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பதவி உயர்வு பணியிடங்கள் சென்னைக்கு மாற்றம்: நிலஅளவைத் துறையில் நுாதனம்

பதவி உயர்வு பணியிடங்கள் சென்னைக்கு மாற்றம்: நிலஅளவைத் துறையில் நுாதனம்

மதுரை : ''பதவி உயர்வின் போது வெளியூருக்கு மாறுதலாவதை தவிர்க்க, பிற மாவட்ட பணியிடங்களை சென்னைக்கே மாற்றி பொறுப்பேற்கும் நிலை உள்ளது'' என நிலஅளவைத் துறை ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.நிலஅளவைத் துறையில் சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. இத்துறையில் சென்னையில் உள்ளவர்கள், பதவி உயர்வின்போது, நுாதன முறையை கையாள்கின்றனர். தாங்கள் பொறுப்பேற்க வேண்டிய உயர்பதவி சென்னையில் இல்லாதபோது, வெளிமாவட்டங்களில் உள்ள அப்பணியிடத்தை சென்னைக்கே மாற்றி பொறுப்பேற்கின்றனர். இதனால் பணிபுரியும் இடத்திலேயே பதவி உயர்வு கிடைத்து விடுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் பதவி உயர்வுக்காக 14 நிர்வாக அலுவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சென்னையில் உள்ளவர்களுக்கு இப்பதவி உயர்வு வந்தபோது மதுரை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாக அலுவலர் பணியிடங்களை சென்னைக்கு மாற்ற ஏற்பாடு செய்து முடியும் தருவாயில் உள்ளது. இதனால் இம்மாவட்டங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நிர்வாக அலுவலர் பணியிடங்கள் இல்லாமல் போகும் வாய்ப்பு உள்ளது.இதுபோல மதுரை மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் பணியிடங்கள் சில ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் அதிகாரிகள் குவிகின்றனரே தவிர மாவட்டங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்படுவதில்லை. சார்நிலை ஆய்வாளர்கள் பணியிடங்களும் பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை வரைவாளர் பணியிடங்கள் விருதுநகரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.நிலஅளவைத் துறை அலுவலர் சிலர் கூறுகையில் ''இதேபோல மூன்று ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் இருப்பவர்களை இடமாற்றம் செய்வதிலும் பாரபட்சமான நிலை உள்ளது. சர்வேயர், தொழில் நுட்ப களப்பணியாளர்கள் மாற்றப்படுகின்றனரே தவிர, நிர்வாக பிரிவில் உள்ளவர்களை கண்டுகொள்வதில்லை. இதனால் ஓய்வு வயதை நெருங்குவோர் பாதிக்கப்படுவதாக'' வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ