மாநகராட்சி பொறியாளர்களின் பணிகள் பிரித்து சுமைகள் குறைப்பு; தினமலர் செய்தி எதிரொலி
மதுரை; மதுரை மாநகராட்சியில் குறிப்பிட்ட பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பம்பிங் ஸ்டேஷன், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் பலருக்கும் பிரித்துக்கொடுத்து பணிச்சுமை மட்டுமின்றி மனஅழுத்தமும் குறைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி பொறியியல் பிரிவில் குறிப்பிட்ட சில பொறியாளர்களுக்கு கூடுதல் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவு அலுவலர்கள் பணிச்சுமையில் தவிப்பதாக சர்ச்சை எழுந்தது. சிலருக்கு இதய பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை பெற்ற தகவல் தெரிய வந்தது. இதனால் மன அழுத்தத்தை குறைக்க பொறியியல் பிரிவு உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் யோகா பயிற்சி வகுப்புக்கு கமிஷனர் சித்ரா ஏற்பாடு செய்துள்ளார்.இந்நிலையில், ஒரு அதிகாரிக்கு அதிக எண்ணிக்கையிலான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதே பணிச்சுமைக்கும், மனஅழுத்தத்திற்கும் காரணம் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பம்பிங் ஸ்டேஷன், தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை கூடுதல் பொறியாளர்களுக்கு பிரித்து கொடுத்து கண்காணிக்க கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி இளநிலை பொறியாளர்கள் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்திக்கு மண்டலம் 1, பாண்டிக்குமாருக்கு மண்டலம் 2, செல்வக்குமாருக்கு மண்டலம் 3, ரகுநாதனுக்கு மண்டலம் 4, பழனி குமாருக்கு மண்டலம் 5 க்கு உட்பட்ட பம்பிங் ஸ்டேஷன் பணிகள் ஒதுக்கப்பட்டன. இப்பணியை இதுவரை ஒரு இளநிலை பொறியாளர் மட்டுமே கண்காணித்து வந்தார்.இதுபோல் இதுவரை ஒருவரே கண்காணித்து வந்த தெரு விளக்கு பணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி உதவி பொறியாளர் சங்கிலிராஜனுக்கு 1, 2 மண்டலங்கள், இளநிலை பொறியாளர் பாஸ்கரபாண்டியனுக்கு 4, 5 மண்டலங்கள், இளநிலை பொறியாளர் (பொறுப்பு) ஸ்டீபனுக்கு மண்டலம் 3 ம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரே இடத்தில் இருந்த கண்காணிப்பு பணிகள் தற்போது பரவலாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணிச்சுமை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் அறிக்கை: கமிஷனர் கறார்
மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம், பாதாளச் சாக்கடை பராமரிப்புக்காக தலா 4 களப் பணியாளர்கள் வீதம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பழுது பணிகளை இவர்கள் கண்டறிந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் களப்பணியை உதவி, இளநிலை பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் கண்காணித்து அதன் அடிப்படையில் அனைத்து வார்டு பொறியாளர்களும் தினம் மாலைக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என கமிஷனர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.