| ADDED : ஜூன் 17, 2024 12:55 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியின் 24 வார்டுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் நீர்நிலைகளில் சேர்ந்து மாசுபடுத்தி வருகிறது.உசிலம்பட்டி நகராட்சியில் மாமரத்துப்பட்டி, அருணாசலம்பட்டி, கருக்கட்டான்பட்டி பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் உசிலம்பட்டி கண்மாயில் கலக்கிறது. அன்னம்பாரிபட்டி பகுதியில் சேரும் கழிவுநீர் அங்குள்ள வண்ணான் ஊருணி, நீராலி ஊருணியில் சேர்கிறது.வில்லாணிச்சாலை, பேரையூர் ரோடு, கவண்டன்பட்டி ரோடுகளில் சேரும் கழிவுநீர் கவண்டன்பட்டி ஊருணிகளில் கலக்கிறது. மதுரை ரோடு பகுதி தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டின் இரு பக்கங்களின் வழியாக கொங்கபட்டி ஊருணி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி அருகில் உள்ள ஊருணிகளில் கலக்கிறது.மழைக்காலத்தில் கழிவுநீர் செல்லும் வழியில் அடைப்புகள் ஏற்பட்டு, தேங்கி குடியிருப்பு பகுதிக்குள்ளும், தெருக்கள், ரோடுகளிலும் தேங்கி சுகாதாரக்கேடை ஏற்படுத்துகிறது. கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.