உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கப்பலுார் டோல்கேட்டை அகற்றக்கோரி ஜூலை 30ல் திருமங்கலத்தில் கடையடைப்பு

கப்பலுார் டோல்கேட்டை அகற்றக்கோரி ஜூலை 30ல் திருமங்கலத்தில் கடையடைப்பு

திருமங்கலம்: திருமங்கலம் கப்பலுாரில் விதிமுறைகளை மீறி டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் பகுதி மக்கள் திருமங்கலத்தை விட்டு வெளியேறினாலே கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அதேபோல் தமிழகத்தின் 2வது மிகப்பெரிய தொழிற்பேட்டையான கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் இருந்து திருமங்கலத்திற்கு வந்து செல்வதற்கும் பணியாளர்களை அழைத்துச் செல்வதற்கும் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் நடத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதும் தற்காலிகமாக தீர்வு காணப்படுவதும் வழக்கம்.ஜூலை 10 ல் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் டோல்கேட் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் கப்பலுார் தொழிலதிபர்கள் சங்கம், திருமங்கலம் பகுதி அனைத்து சங்கங்கள், டோல்கேட் எதிர்ப்பு குழுவினரும் கலந்து கொண்டனர்.இதனால் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கப்பலுார் டோல்கேட் ஸ்தம்பித்தது. இதனால் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கும் வரை பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டது. மேலும் கப்பலுார் டோல்கேட்டை சுற்றி 10 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகன ஆவணங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் முறையான தீர்வு எடுக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று நடந்த டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் கூட்டத்தில் டோல்கேட்டை அகற்றக்கோரி ஜூலை 30ல் திருமங்கலம் கப்பலுார் பகுதிகளில் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ