உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல் அறுவடைக்கு பின் உளுந்து விதைக்கணும்

நெல் அறுவடைக்கு பின் உளுந்து விதைக்கணும்

மதுரை : கோடையில் 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் அறுவடை துவங்க உள்ள நிலையில் அறுவடைக்கு முன் அல்லது பின் 3 நாட்களுக்குள் உளுந்து, பாசிப்பயறு விதைக்கலாம் என மதுரை வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மதுரையில் சம்பா சீசன் வரை 39 ஆயிரத்து 731 எக்டேரிலும் குறுவைப்பருவத்தில் 4306 எக்டேரிலும் நெல் சாகுபடியாகியுள்ளது. டிசம்பர் துவங்கிய கோடை பருவத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வாடிப்பட்டி, அலங்காநல்லுார், செல்லம்பட்டி, திருப்பரங்குன்றம் பகுதிகளில் 10 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 10 முதல் அறுவடை தொடங்கி விடும். தொடர்ந்து நெல் சாகுபடி செய்தாலோ அல்லது நிலத்தை தரிசாக விட்டாலோ மண்வளம் குறைந்து அடுத்து நெல் உற்பத்தி திறனும் குறைந்து விடும். இதற்கு மாற்றாக நெல் அறுவடை செய்வதற்கு 3 நாட்களுக்கு முன்பாக உளுந்து அல்லது பாசிப்பயறு விதை விதைக்கலாம். இயந்திர அறுவடையின் போது பயறு விதைகள் பூமிக்குள் இறங்கி விதைக்க ஆரம்பிக்கும். அல்லது அறுவடை செய்த 3 நாட்களுக்குள் நிலத்தில் ஈரம் இருக்கும் போதே விதைக்கலாம். தண்ணீர் அதிகம் தேவைப்படாது.மழைப்பொழிவை பயன்படுத்தி 70 - 75 நாட்களுக்குள் உளுந்து, பாசிப்பயறு அறுவடை செய்யலாம். இதன் மூலம் மண்ணில் தழைச்சத்து மேம்படுவதோடு பயறுகளை அறுவடை செய்வதால் இன்னொரு வருமானமும் கிடைக்கும். அடுத்து நெல் பயிரிடும் போது கூடுதல் மகசூல் கிடைக்கும். வேளாண் துறையின் கீழ் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மொத்தம் 20 டன் உளுந்து, 6 டன் பாசிப்பயறு விதைகள் இருப்பில் உள்ளன. ஏக்கருக்கு 8 கிலோ தேவைப்படும். விதை கிராமதிட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் விதைகள் வாங்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ