உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பக்தி பாடலுக்கு சாமியாடிய மாணவியரால் திடீர் பரபரப்பு

பக்தி பாடலுக்கு சாமியாடிய மாணவியரால் திடீர் பரபரப்பு

மதுரை:மதுரை தமுக்கத்தில் நேற்று முன்தினம் புத்தகக்கண்காட்சி துவங்கியது. இதை முன்னிட்டு, கரகம், காவடி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பக்தி பாடல் ஒலித்த போது, கருப்பண்ணசாமி வேடம் அணிந்தவர் ஆடியதைப் பார்த்து, சில மாணவியர் சாமி வந்ததைப் போல, தாங்களும் சந்தோஷமாக ஆடினர். பின், ஆடிய களைப்பில் கீழே சோர்வடைந்து உட்கார்ந்த வீடியோ இணையத்தில் பரவியதால் சர்ச்சையானது.இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் தரப்பில் விசாரித்த போது, 'மாணவியர் நலமாக உள்ளனர். ஆர்வத்துடன் தாங்களும் எழுந்து ஆடினரே தவிர எந்த பிரச்னையும் இல்லை' என, தெரிவிக்கப்பட்டது. நடனமாடிய மாணவியர் மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்தவர்களா என மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, 'பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவியர் ஒரு விடுதியில் தங்கியுள்ளனர். அந்த மாணவியர் குழுவாக வந்தபோது ஆடியுள்ளனர்' என்றனர்.இதற்கிடையே வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ''புத்தகக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சி நடந்த போது மாணவியர் நடனமாடினரே தவிர, அது ஆன்மிக நிகழ்ச்சியோ, மதம் சம்பந்தமான நிகழ்ச்சியோ அல்ல. இதை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி