உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கரும்பு விவசாயிகள் கொந்தளிப்பு; ஆலையை திறக்காமல் ஆளாளுக்கு காரணம் சொல்வதா; பீல்டு அலுவலர், கரும்பு அலுவலர்கள் நியமனம் என்னானது

கரும்பு விவசாயிகள் கொந்தளிப்பு; ஆலையை திறக்காமல் ஆளாளுக்கு காரணம் சொல்வதா; பீல்டு அலுவலர், கரும்பு அலுவலர்கள் நியமனம் என்னானது

மதுரை ; மதுரை அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்த பீல்டு அலுவலர்கள், கரும்பு அலுவலர்களை வேறிடத்திற்கு மாற்றி விட்டு விவசாயிகள் கரும்பு தரவில்லை என்று ஆலையை திறக்காமல் ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் போர்க்கொடி எழுப்பினர்.தென்தமிழகத்தின் ஒரே பொதுத்துறை நிறுவனமான இந்த ஆலையை மதுரை, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, விருதுநகரில் அருப்புக்கோட்டை பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்த ஆலைக்குட்பட்டு 4000 ஏக்கரில் ஆலைக்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 35 டன் வீதம் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் டன் கரும்புகள் உற்பத்தியாகும். ஒரு லட்சம் டன் அளவு கரும்பு இருந்தாலே ஆலையில் அரவையை தொடங்கலாம். ஆனால் 2020ல் ஆலை மூடப்பட்டது. இங்கு பணியில் இருந்த பீல்டுமேன், கரும்பு அலுவலர்களை (கேன் ஆபீசர்) வேறு ஆலைக்கு மாற்றி விட்டனர். இப்போது பணியாளர்கள் இல்லாததால் ஆலையை திறக்காமல் மறைமுகமாக தங்களை குற்றம் சொல்வதாக கொந்தளிக்கின்றனர் கரும்பு விவசாயிகள்.இதையடுத்து மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில துணைத்தலைவர் பழனிசாமி கூறியதாவது:பீல்டுமேன், கரும்பு அலுவலர்கள் கரும்புகளை பதிவு செய்யாமல் தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்ல மறைமுகமாக எங்களை கட்டாயப்படுத்துகின்றனர். தனியார் ஆலை கரும்பு வெட்டுபவர்கள் ஒன்றிரண்டில் நோய் தாக்கியிருந்தால் கூட அந்த மொத்த பரப்பளவையும் விட்டு செல்கின்றனர். விடுபட்ட கரும்புகளை தனியாக ஆள் வைத்து வெட்டி வேறெங்கும் அனுப்ப முடியாது. கரும்புக்கான தொகையும் உடனடியாக கிடைப்பதில்லை. சில நேரங்களில் லாரிகளில் ஏற்றும் போது டன் கணக்கில் எடை மோசடி செய்கின்றனர். இதனால் விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்.மேலும் அரசு ஆலையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.200 வீதம் அரசு ஊக்கத்தொகை வழங்கும். அதையும் மறைமுகமாக நிறுத்தி விட்டனர்.கரும்புகளை பதிவு செய்வதற்குரிய அலுவலர்கள் உட்பட 47 பணியாளர்களை ஆலை மூடியிருப்பதாக காரணம் காட்டி வேறு ஆலைக்கு அரசு அனுப்பி விட்டது. அவர்களை திரும்பவும் மதுரைக்கு வரவழைத்து ஆலை அரவையை துவங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் ஆலை திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் பேசும் போதும் அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 157 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஆலையில் ரூ.100 கோடி செலவு செய்து இயந்திரங்கள் வாங்கப்பட்ட நிலையில் கருவிகள் துருப்பிடித்து கிடக்கின்றன. கரும்பு சர்க்கரை போக மீதமுள்ள சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான கருவிகள் உள்ளன. 80 சதவீத பணிகள் முடிந்தநிலையில் கவனிப்பாரற்று கிடக்கிறது.ஆலை திறக்காவிட்டால் ஆலைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை