உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்டம் விட்டு கண்டம் தாண்டி மதுரை வந்த தமிழரின் உடல்; 95 வயது தாய் கடைசியாக பிள்ளையை பார்க்க புளியங்குடி வந்தார்  நெதர்லாந்து டூ இந்தியா வரை பெருமூச்சுவிட வைக்கும் நடைமுறைகள்

கண்டம் விட்டு கண்டம் தாண்டி மதுரை வந்த தமிழரின் உடல்; 95 வயது தாய் கடைசியாக பிள்ளையை பார்க்க புளியங்குடி வந்தார்  நெதர்லாந்து டூ இந்தியா வரை பெருமூச்சுவிட வைக்கும் நடைமுறைகள்

மதுரை, : நெதர்லாந்து நாட்டில் இறந்த முரளி ஆனந்த்ராஜ் 61, என்பவரின் உடல், பல்வேறு நடைமுறைகள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் 15 நாட்களுக்கு பிறகு நேற்று சொந்த ஊரான தென்காசி மாவட்டம் புளியங்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது 95 வயதான தாய் சீனியம்மாள் கடைசியாக தனது பிள்ளை முகத்தை பார்த்து கண்கலங்கியது காண்போரையும் கண்ணீர் விடச்செய்தது.தென்காசி புளியங்குடியைச் சேர்ந்தவர் முரளி ஆனந்தராஜ். கம்ப்யூட்டர் புரோகிராமரான இவர், 14 ஆண்டுகளாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள நெதர்லாந்து நாட்டில் மனைவி, மகளுடன் வசித்தார். புத்தாண்டு அன்று நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் 'அட்மிட்' ஆன நிலையில் ஜன.,2ல் இறந்தார். மகனின் முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்று தாய் கதறினார்.இதன்காரணமாக முரளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடிவு செய்து மதுரை நேதாஜி மெடி டிரஸ்ட் நிறுவனர் ஹரிகிருஷ்ணனை, ஞானசேகரன் என்பவர் மூலம் அணுகினர். ஹரிகிருஷ்ணன் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தவர்களின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக மதுரையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறார். நெதர்லாந்தில் இருந்து முரளி உடலை கொண்டு வருவது என்பது அவருக்கு புது அனுபவம் என்பதால், வெளிநாடுகளில் இருந்து உடலை கொண்டு வரும் பணியை செய்து வரும் டில்லி தனியார் கார்கோ ஏஜன்சியை அணுகி, அவர்கள் மூலம் நேற்று மாலை விமானத்தில் முரளி உடலை மதுரை கொண்டு வந்து புளியங்குடிக்கு எடுத்துச்சென்றார்.

பெருமூச்சுவிட வைக்கும் நடைமுறைகள்

இதுகுறித்து நமது நிருபரிடம் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது: ஆசிய நாடுகளுக்குள் உடலை கொண்டு செல்வதிலும், எடுத்து வருவதிலும் சில நடைமுறைகள்தான் இருக்கும். ஆனால் முரளி உடலை ஐரோப்பா கண்டத்தில் இருந்து ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியாவுக்கு எடுத்து வரவேண்டும் என்பதால் நடைமுறைகள் அதிகம் என அறிந்து என்னை போல் டில்லியில் உள்ள ஏஜன்சியை அணுகினேன். அவர்கள் நெதர்லாந்தில் உள்ள ஏஜன்சியை அணுகி விபரத்தை கூறியதை தொடர்ந்து, உடலை கொண்டு வருவதற்கான நடைமுறைகள் ஜன.,3 முதல் துவங்கியது.நெதர்லாந்தில் உள்ள இந்திய துாதரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு, முரளி மற்றும் மனைவி, மகளின் பாஸ்போர்ட், விசா சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அங்கிருந்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உண்மை தன்மை அறிய விண்ணப்பம் அனுப்பப்பட்டது. அமைச்சகத்தில் இருந்து தமிழக டி.ஜி.பி., தென்மண்டல ஐ.ஜி., வழியாக தென்காசி எஸ்.பி.,க்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. உள்ளூர் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். முரளியின் உடலுக்காக உறவினர்கள் காத்திருப்பது குறித்து அறிக்கை சமர்ப்பித்தனர். இது மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் நெதர்லாந்து இந்திய துாதரகத்திற்கு அனுப்பப்பட்டு 'கிரீன்' சிக்னல் கொடுக்கப்பட்டது. இந்த நடைமுறைகள் 10 நாட்களாக நடந்தன.

சுகாதார மையம் விதிப்படி 'பேக்கிங்'

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு உடலை எடுத்துச்செல்ல உலக சுகாதார மையம் விதிப்படிதான் 'பேக்கிங்' செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக மருத்துவ சான்று, துாதரகம், போலீஸ், தடையில்லா சான்று, உடலை கொண்டு செல்பவர், பெறுபவர் குறித்த விபரங்கள் அடங்கிய சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன்பிறகே உடல் பதப்படுத்தப்பட்டு 'பேக்கிங்' செய்யப்படும்.அதன்அடிப்படையில் 5 நாட்களில் தேவையான சான்றுகள் அங்குள்ள ஏஜன்சியினர் பெற்று துாதரகத்தில் ஒப்படைத்தனர். நேற்றுமுன்தினம் இரவு முரளியின் உடல் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டு நேற்று காலை மும்பை கொண்டு வரப்பட்டது. டில்லி ஏஜன்சியினர் பெற்று இந்திய நடைமுறைப்படி முரளியின் உடலை மீண்டும் 'பேக்கிங்' செய்தனர். பின்னர் பயணிகள் விமானம் மூலம் நேற்று மாலை மதுரை கொண்டு வரப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. என் சர்வீஸில் இது எனக்கு புது அனுபவம். இவ்வாறு கூறினார்.நெதர்லாந்தில் இறந்த முரளி உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணன்

'ரியல்' நாயகன்

ஹரிகிருஷ்ணன் மதுரையில் அனாதை பிரேதம், விபத்தில் இறந்தவர்கள், கொலை, தற்கொலை உடல்களை சேவை அடிப்படையில் இலவசமாக தனது வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஒப்படைத்து வருகிறார். அனாதை பிரேதங்களை சொந்த செலவிலும் அடக்கம் செய்து வருகிறார். வெளிமாநிலங்களுக்கும் உடலை எடுத்துச்செல்கிறார். இவரது கதையை அடிப்படையாக வைத்துதான் 'அயோத்தி' படம் எடுக்கப்பட்டது. இவரது சேவை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக தினமலர் நாளிதழ்தான் வெளி உலகிற்கு தெரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

'ரியல்' நாயகன்

ஹரிகிருஷ்ணன் மதுரையில் அனாதை பிரேதம், விபத்தில் இறந்தவர்கள், கொலை, தற்கொலை உடல்களை சேவை அடிப்படையில் இலவசமாக தனது வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஒப்படைத்து வருகிறார். அனாதை பிரேதங்களை சொந்த செலவிலும் அடக்கம் செய்து வருகிறார். வெளிமாநிலங்களுக்கும் உடலை எடுத்துச்செல்கிறார். இவரது கதையை அடிப்படையாக வைத்துதான் 'அயோத்தி' படம் எடுக்கப்பட்டது. இவரது சேவை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக தினமலர் நாளிதழ்தான் வெளி உலகிற்கு தெரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை