உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்லுயிர் சூழலை மீட்க ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் அமைச்சர் நடவு செய்தார்

பல்லுயிர் சூழலை மீட்க ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் அமைச்சர் நடவு செய்தார்

மதுரை: மதுரை மாவட்டத்தில் மரப்பெயர் கொண்ட பல்வேறு ஊர்களில் 'ஊர் பெயருக்கேற்ற மரக்கன்று நடுதல்' விழாவை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.காலநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த அரசு, அரசு சாரா அமைப்புகள் சார்பில் மரக்கன்று நடப்பட்டு வருகிறது. அதில் அயல் மரங்களே அதிகம் நடப்படுகிறது. ஒருகாலத்தில் கடம்ப மரம் நிறைந்த பகுதி என்பதால் 'கடம்பவனம்' என்றும், மருத மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் 'திருமருதத்துறை' என்றும் மதுரை அழைக்கப்பட்டது. இன்று நகருக்குள் கடம்ப மரங்களும், மருத மரங்களும் சொற்ப அளவிலேயே உள்ளன. பாரம்பரிய மரங்களை இழந்து நிற்கும் மதுரையின் பல்லுயிர் சூழலை மீட்கும் நோக்கில் ஊர் பெயருக்கேற்ற நாட்டு மரக்கன்றுகள் இவ்விழாவில் நடப்பட்டன. அதன்படி, திருப்பாலையில் பாலை, வெப்பாலை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு அமைச்சர் மூர்த்தி இப்பணியை துவக்கி வைத்தார். அத்திபட்டியில் அத்தி மரம், ஆலங்குளத்தில் ஆலமரம், இச்சிக்குளம் கண்மாய் அருகே இச்சி மரம், ஈச்சனேரியில் ஈச்ச மரம், திருவாதவூரில் வாத மரம், பனைக்குளத்தில் பனை விதை, பூவந்தியில் பூவந்தி மரம், பூலாம்பட்டியில் கரும்பூலா மரம், மருதங்குளத்தில் மருத மரம், விளாங்குடி, விளாச்சேரியில் விளா மரம் என மாவட்டத்தின் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் அவ்வூர் பெயருக்கு பொருத்தமான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட மரங்களை நடுதல், ஊர் பெயரில் உள்ள மரக்கன்றுகளை நடுதல், கோயில் தல மரங்களை அடையாளம் கண்டு நடுதல், வழிபாட்டில் உள்ள பழமையான மரங்களை பாதுகாத்தல் என மரக்கன்று நடும் பணியை செய்து வரும் பசுமையாளர்கள் குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ