வந்தே பாரத் ரயிலில் சுதந்திர போராட்ட வீரர்
மதுரை : மதுரை -- பெங்களூரு வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் 101 வயது சுதந்திரப் போராட்ட வீரர் அழகம்பெருமாள் கலந்து கொண்டார்.மதுரை -- பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் ரயில் சேவை ஆக.31ல் துவக்கப்பட்டது. இச்சேவையை பிரதமர் மோடி வீடியோகான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நடந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் வி. சோமண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ரயிலில் பேரையூரைச் சேர்ந்த 101 வயது சுதந்திர போராட்ட வீரர் அழகம்பெருமாளும் கலந்து கொண்டார்.பேரையூர் தாலுகா டி.கிருஷ்ணாபுரத்தில் பிறந்தவர். 1942ல் மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே ஆகஸ்ட் புரட்சியில் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் 6 மாதங்கள் பெல்லாரி அல்லிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.தமிழ் ஆர்வலரான அழகம்பெருமாள், வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி விழாவில் 1330 திருக்குறளையும் 1.40 மணி நேரத்தில் ஒப்பித்து சாதனை புரிந்தார். திருக்குறளில் 'நவரசம்' எனும் தலைப்பில் 120 பக்கத்தில் ஆய்வுக் கட்டுரையை மதுரை உலக தமிழ்ச்சங்கம் மூலமாக தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளார். திருக்குறளில் உள்ள 1300 க்கும் மேற்பட்ட பழந்தமிழ்ச் சொற்களுக்கு பொருள் எழுதியுள்ளார்.