சொன்னது 2 நாட்கள்; போனது 4 நாட்கள் குடிநீருக்கு அலையும் மக்கள் அதிருப்தி; முடங்குதா மாநகராட்சி நிர்வாகம்
மதுரை: மதுரை நகரில் மண்டலம் 2க்கு உட்பட்ட வார்டுகளில் இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்த மாநகராட்சி, 4 நான்களாகியும் இதுவரை குடிநீர் வினியோகிக்காததால் மக்கள் தண்ணீருக்கு அலைகின்றனர். குடிநீர் வினியோகம் தொடர்பாக மாநகராட்சி எவ்வித அறிவிப்பும் செய்யாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.மாநகராட்சியில் குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளஉள்ளனர். இதனால் மண்டலம் 2க்கு உட்பட்ட வார்டு எண்.23 ல் செல்லுார் தாகூர் நகர் சந்திப்பு, குலமங்கலம் மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறை மூலம் செல்லுார் கண்மாயில் இருந்து உபரிநீர் செல்ல கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. இப்பகுதியில் வைகை வடகரை முழுவதும் குடிநீர் செல்லும் பிரதான குழாய்கள் உள்ளன. இக்குழாய்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதால் பிப். 12, 13 ல் வைகை வடகரை பகுதிகள் முழுவதும் வார்டு எண் 21 முதல் 35, வார்டுகள் 10, 12, 14, 15, 16 பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்வதாக மாநகராட்சி அறிவித்தது.இதன்படி 2 நாட்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நான்கு நாட்களாக வினியோகம் இல்லை. இதனால் அனைத்து வார்டுகளிலும் குடிநீருக்கு திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள் மேலும் தாமதமாகும் சூழல் உள்ளது. ஆனாலும் அதற்கான அறிவிப்பை வெளியிட மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் வியாபாரம் ஜரூர்
இந்நிலையில் நகரில் பிற பகுதிகளில் உள்ள வேன், லாரிகளில் குடிநீர் வியாபாரிகள் மண்டலம் 2 பகுதி வார்டுகளில் சுற்றி வருகின்றனர். தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கால் வார்டு கவுன்சிலர்களை மக்கள் கேள்விக் கேட்க துவங்கியதால் அவர்களும் ஓடிஓளிகின்றனர். கலெக்டர் நடவடிக்கை தேவை
மண்டலம் 2 பகுதியில்தான் கலெக்டரின் முகாம் அலுவலகம் உள்ளது. கூடுதல் கலெக்டர், டி.ஆர்.ஓ., உட்பட மாவட்ட அதிகாரிகள், நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளன. அங்கெல்லாம் குடிநீர் வினியோகிக்க மாற்று ஏற்பாடு செய்யப்படுவதால் வார்டில் நிலவும் பிரச்னை அதிகாரிகளுக்கு தெரியாமல் போய்விட்டதா என மக்கள் குமுறுகின்றனர். மாநகராட்சி மெத்தனம் குறித்து கலெக்டர் சங்கீதா கண்டித்து, மக்களை வதைக்கும் குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிகாரிகள் எங்கே
மாநகராட்சியில் பல வார்டுகளில் உதவி பொறியாளர் பணியிடங்களில் தேர்ச்சி திறன் 2 அந்தஸ்திலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வார்டுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீர் கசிவு, சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. செல்லுார் பகுதி வார்டில் அதிகம் குடிநீர் குழாய் உடைப்பு, சாக்கடை கலப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால் அப்பகுதி வார்டுக்கு உதவி பொறியாளர் அந்தஸ்தில் நியமிக்கப்படவில்லை. திறமையான அதிகாரிகளை இதுபோன்ற முக்கிய பகுதிகளில் நியமிக்க மாநகராட்சி கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும்.