சிறுநீரக விற்பனை மோசடி வழக்கில் 3 பேர் கைது உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: சிறுநீரகம் விற்பனை முறைகேடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. பரமக்குடி சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனு: நாமக்கல் மாவட்டத்தில் சில ஏழை தொழிலாளர்களை சிறுநீரக (கிட்னி) தானம் செய்பவர்களாக சிலர் பயன்படுத்தினர். இம்முறைகேட்டில் திருச்சி, பெரம்பலுார் மாவட்ட இரு தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டுள்ளன. பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள ஒரு மருத்துவமனையை மணச்சநல்லுார் தி.மு.க.,-எம்.எல்.ஏ., கதிரவனின் குடும்பம் நிர்வகிக்கிறது. திருச்சி மருத்துவமனை ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவருடன் தொடர்புடையது. தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு, 'சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய திருச்சி, பெரம்பலுாரிலுள்ள இரு மருத்துவமனைகளுக்கு வழங்கிய உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன,' என அறிக்கை தாக்கல் செய்தது. ஆக.,25ல் இரு நீதிபதிகள் அமர்வு மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் மதுரை எஸ்.பி., அரவிந்த், நீலகிரி எஸ்.பி., நிஷா, திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசன், கோவை எஸ்.பி., கார்த்திகேயன் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டது. நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது. சிறப்பு விசாரணைக்குழு சார்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: இவ்வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேரிடம் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது. விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜராஜன்: எப்.ஐ.ஆர்., இணையதளத்தில் வெளியிடப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. போக்சோ, பெண் வன்கொடுமை வழக்குகளில் மட்டுமே ரகசியம், பாதுகாப்பு கருதி பொது வெளியில் எப்.ஐ.ஆரை வெளியிடாமல் முடக்கி வைக்க முடியும். அஜ்மல்கான்: எப்.ஐ.ஆர்., நகல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மனுதாரருக்கு தேவைப்பட்டால் எப்.ஐ.ஆர்., நகல் வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு அவகாசம் அளித்து விசாரணையை நவ.,27 க்கு ஒத்திவைத்தனர்.