உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உழவர் நல சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியம்

உழவர் நல சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியம்

மதுரை:'வேளாண் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் 30 சதவீத மானியத்துடன் உழவர் நல சேவை மையம் அமைக்கலாம்' என கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் 20 சேவை மையங்கள் அமைப்பதற்கான இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய பட்டதாரி, டிப்ளமோ முடித்தவர்கள் மையம் அமைக்க முன்வரலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் தொழில் தொடங்கினால் ரூ.3 லட்சம், ரூ.20 லட்சத்தில் தொடங்கினால் ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த மையங்களில் விதைகள், உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யலாம். பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும். நவீன தொழில்நுட்பம், விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல், வேளாண் இயந்திர வாடகை மையம், ட்ரோன், சேவை வேளாண் இயந்திரம் பழுதுபார்க்கும் பட்டறை போன்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும். இம்மையம் மூலம் விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற முடியும். பங்கேற்பாளர்களுக்கு வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படும். 45 வயதுக்குட்பட்டோர் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். கடன் ஒப்புதல் பெற்ற பின் www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதள முகவரியில் ஆவணங்களைச் சமர்ப்பித்து மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !