பட்டாசு வெடித்ததில் 4 பேருக்கு பார்வையிழப்பு *அரவிந்த் மருத்துவமனையில் கண்கள் அகற்றம்
மதுரை : மதுரையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த போது நேர்ந்த விபத்துகளில் ஒரு கண்ணில் நிரந்தரமாக பார்வையிழந்த மூன்று சிறுவர்கள், ஒரு இளைஞரின் கண்கள் அகற்றப்பட்டன.மதுரையில் கருப்பாயூரணியைச் சேர்ந்த 4 வயது சிறுவன், உசிலம்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சிலைமானைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கு கண்கள் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியும் அனுமதிக்கப்பட்டார். இவர்களின் கண்கள் கருவிழியைத் தாண்டி வெண்படலமும் முழுமையாக சிதைவடைந்ததால் கண்கள் அகற்றப்பட்டன என முதன்மை கண் டாக்டர் கிம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கவனக்குறைவாக பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தால் 104 பேர் கண்ணில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்தனர். இவர்களில் 10 பேருக்கு கருவிழி பாதிக்கப்பட்டிருந்தது. நான்கு பேருக்கு கருவிழி, வெண்படலம் முழுவதும் சிதைந்ததால் வேறுவழியின்றி கண் அகற்றப்பட்டது. நால்வருக்கும் ஒரு கண்ணில் மட்டும் பார்வையுள்ளது. வெண்படலம் சிதைந்ததால் கண்தானம் பெற்று கூட பார்வையை மீட்கமுடியாது. அலட்சியமாக வெடி வெடித்ததால் ஏற்பட்ட விபத்து என்பதை கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாக வெடி வெடிக்க வேண்டும். கண்ணில் ஏற்பட்ட புண் ஆறிய பிறகு நால்வருக்கும் செயற்கை கண்கள் பொருத்தப்படும். இதில் பார்வையிருக்காது என்றார்.