மஹா சிவராத்திரிக்கு 440 சிறப்பு பேருந்துகள்
மதுரை: மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சிங்காரவேலு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'வரும் புதன்கிழமை (பிப்.,26), மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிப்.,25 முதல் பிப்.,27 வரை பொதுமக்கள், மதுரையில் இருந்து திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக 440 பேருந்துகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும், கால நேர விரயத்தையும் தவிர்க்கும்பொருட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்யலாம்.பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.