அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 45 ஆயிரத்து 164 அறுவை சிகிச்சைகள்
மதுரை: விபத்தில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த 6 மணி நேரத்திற்குள் 'நம்மை காக்கும் 48 ' திட்டத்தின் கீழ் இரண்டாண்டுகளில் 45 ஆயிரத்து 164 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக விபத்து மற்றும் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் சரவணகுமார் தெரிவித்தார்.இத்துறை சார்பில் அரசு மருத்துவமனையில் உலக உடற்காய தின விழா நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், துணை மருத்துவ கண்காணிப்பாளர் செல்வராணி முன்னிலை வகித்தனர். உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் பேசினார்.துறைத்தலைவர் சரவணகுமார் பேசியதாவது: விபத்தில் அடிப்பட்டவர்களின் தீவிரத்தைப் பொறுத்து சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்களாக பிரித்து 2 நிமிடங்களில் கண்காணித்து அடுத்த 2 நிமிடங்களில் எத்தகைய சிகிச்சை தேவை என்பதை முடிவு செய்து 8 நிமிடங்களில் சிகிச்சை தொடங்கி விடுகிறோம். விபத்து பதிவேடுகளை கம்ப்யூட்டர் மயமாக்கியதில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் அவசர சிகிச்சை துறையில் முதுநிலை படிப்பு தமிழகத்தில் மட்டுமே உள்ளது. மருத்துவமனைக்கு வந்த 6 மணி நேரத்திற்குள் 8323 பெரிய அறுவை சிகிச்சை, 36 ஆயிரத்து 841 சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 121 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.17.96 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீட்டு அட்டை இல்லாதவர்களும் பிற மாநிலத்தவர்களும் பயன்பெறலாம். இதுவரை 2 லட்சத்து 1141 பேர் பயன்பெற்றுள்ளனர் என்றனர்.பேராசிரியர் ரவிசங்கர், உதவி பேராசிரியர் சிவசங்கர் ஏற்பாடுகளை செய்தனர்.