மதுரை கோட்டத்தில் மகளிர் விடியல் பயண திட்டத்தில் 80 கோடி பேர் பயணம்
மதுரை : மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம் இதுவரை மதுரை கோட்டத்தில் 80 கோடி மகளிர் பயணம் செய்துள்ளதாக மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மேலாண் இயக்குநர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் 2400 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் மகளிர் விடியல் பயண திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது தினசரி 4.5 லட்சம் பெண்கள் பயணம் செய்து வந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 7.5 லட்சம் மகளிர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். 2021 முதல் 2025 வரை 80 கோடி முறை பெண்கள் பயணம் செய்து பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளனர். இந்நாள் வரை 702 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளே செல்லாத இடம் இல்லை என்ற வகையில் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியன மிகப்பெரிய மறுமலர்ச்சியை கண்டுள்ளது. விரைவில் 671 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.