அருணாச்சலரின் சிறப்புகளை எடுத்துரைத்த நாட்டிய நாடகம்
மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், பெங்களூருவைச் சேர்ந்த பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராய்ச்சி மையம் சார்பில் 'அருணாசலம் - ரிக் வேதம் முதல் ரமண மகரிஷி வரை' எனும் தலைப்பில் நாட்டிய நாடகம் நடந்தது.பெங்களூருவின் ரமண மகரிஷி கற்றல் மையம்(ஆர்.எம்.சி.எல்.,), ரமண மகரிஷி அகாடமி பார் பிளைண்ட், சென்னையின் ரமண சன்ரித்ய ஆலயாவைச் (ஆர்.ஏ.எஸ்.ஏ.,) சேர்ந்த 10 பார்வையற்றோர் உட்பட 40 கலைஞர்கள் டிஜிட்டல் திரை பின்னணியுடன் எழில் மிகு நடனங்கள் புரிந்தும், மனதை உருக்கும் பாடல்கள் பாடியும் நாடகத்தை நிகழ்த்தினர்.ரிக் வேத காலத்தில் இருந்து சொல்லப்படும் அருணாச்சலரின் திருவடி - திருமுடி திருவிளையாடல், அண்ணாமலையார் பற்றிய சிறப்புகள், பார்வதி தேவி சிவனின் கண்களை மூடியதால் பூமியை சூழ்ந்த இருளை போக்க நெற்றிக்கண் திறக்கப்பட்டலீலை, மகிஷாசுரன்வதம், அர்த்தநாரீஸ்வரர் வரலாறு, சிவனடியார்களான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதல் ரமண மகரிஷி வரை அவர்கள் வாழ்வில் சிவபெருமான் நிகழ்த்திய அற்புதங்களை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.ஆர்.எம்.சி.எல்., தலைவர் சாரதா நடராஜன், ஆர்.ஏ.எஸ்.ஏ., இயக்குநர் அம்பிகா காமேஸ்வர் நாடகத்தை தயாரித்து இயக்கினர். ஸமாஜத்தின் கவுரவ காரியதரிசிகள் ராஜாராம், வெங்கட்ட நாராயணன், மதுரை ரமண கேந்திர செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாடுகளை செய்தனர்.