மதுரையில் பறக்கும் அரியவகை இலங்கை ஐந்து வளையன் வண்ணத்துப்பூச்சி
மதுரை : பேரையூர் வாழைத்தோட்டம் மலைப்பாதை வழியாக சாப்டூர் சதுரகிரி கோயிலுக்கு சென்ற மதுரை இயற்கைபண்பாட்டு குழுவினர் அந்த பகுதியில் முதன்முறையாக 'இலங்கை ஐந்து வளையன்' என்கிற அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள் இரு(பற)ப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர்.ஒருங்கிணைப்பாளர் குமரேசன் சந்திரபோஸ் கூறியதாவது: இலங்கை, தென்மாநில பகுதிகளில் காணப்படும் அரிய வகை இலங்கை ஐந்து வளையன் வண்ணத்துப்பூச்சிகள் புல்வெளி நிறைத்த மலைப்பகுதிகளில் வசிக்கும். இவை கோவை, ஈரோடு, தேனியின் மேகமலை வனப்பகுதிகளில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.சதுரகிரி மலைப்பாதையில் பிப்ரவரியில் மஞ்சள் கறுப்புச் சிறகன், வரி ஐந்து வளையன், மலபார் புள்ளி இலையொட்டி, சிறு கருமஞ்சள் துள்ளி, மர பழுப்பன், பெருங்கண் புதர் பழுப்பு உள்ளிட்ட 52 வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சதுரகிரி மலை ஆன்மிக தலம் மட்டுமல்ல, பல்லுயிரிய வளம் நிறைந்த பசுமைத் தலம். மதுரை மாவட்டத்தில் இதுவரை 164 வகை வண்ணத்துப் பூச்சிகளை எங்கள் குழுவினர் ஆவணப்படுத்தியுள்ளோம் என்றார்.