உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தென்தமிழகத்தில் இருந்து யுனிகார்ன் நிறுவனம் வர வாய்ப்பு அதிகம்

தென்தமிழகத்தில் இருந்து யுனிகார்ன் நிறுவனம் வர வாய்ப்பு அதிகம்

மதுரை 'தென்தமிழகத்தில் இருந்து 'யுனிகார்ன்' நிறுவனம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) துறைச் செயலர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கம் சார்பில் 2 நாள் 'தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா'வின் துவக்க விழா நேற்று நடந்தது. ஸ்டார்ட்அப் டி.என்., திட்ட இயக்குனர் சிவராஜா ராமநாதன் வரவேற்றார். இந்திய தொழில் கூட்டமைப்பின் சேர்மன் ஸ்ரீவட்ஸ் ராம், மண்டல நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் ஆனந்த், கலெக்டர் சங்கீதா, எம்.பி., வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது: தொழில்முனைவோர்களை கொண்டாடுவதே இத்திருவிழாவின் நோக்கம். இந்தியளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம் பங்கு வகிக்கிறது. நாட்டிலுள்ள எம்.எஸ்.எம்.இ.,க்களில் 8.60 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. அதில் 24 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெண்களின் தலைமையில் செயல்படுகின்றன.தற்போது வரை 4600 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சூழல் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் அறிக்கையின்படி ஏற்றுமதியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. 2030 க்குள் தமிழகம், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார நிலையை அடையும் வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புத்தாக்க மையங்களை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசின் 'ஸ்டார்ட்அப் கொள்கை 2023' வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்அப்களுக்கு என பத்து பிராந்திய மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. அதில் மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் மையங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றன. எனவே அடுத்த 'யுனிகார்ன்' நிறுவனம் தென் தமிழகத்தில் இருந்து வர அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் முதன்முறையாக, தமிழக அரசு ஒரு பங்குதாரர் போல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் செயல்படுகிறது. விவசாயம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மதுரை, திருச்சி பகுதிகளில் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே தொழில்முனைவோர் இத்திருவிழாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். ஸ்டார்ட்அப் டி.என்., துணைத் தலைவர் சிவக்குமார் பழனிசாமி நன்றி கூறினார். துணை கலெக்டர் வைஷ்ணவி பால், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன், தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை