திருப்பரங்குன்றம் கோயிலில் கூடுதல் வசதிகள் சஷ்டி பக்தர்களிடம் குறை கேட்பு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி திருவிழாவில் காப்பு கட்டி கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களிடம் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன் குறைகளை கேட்டனர்.சத்யபிரியா கூறியதாவது: இந்தாண்டு 2500க்கும் அதிகமான பெண் பக்தர்கள் காப்பு கட்டி கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்கின்றனர். அனைத்து மண்டபங்களிலும் கூடுதல் குடிநீர் வசதி, கூடுதலாக 30க்கும் மேற்பட்ட மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கழிப்பறைகளையும் இலவசமாக பயன்படுத்தலாம்.கடந்தாண்டு பக்தர்களிடம் காப்புக் கட்டுக் கட்டணத்துடன், கோயில் தல வரலாறு புத்தகத்தை வழங்கி விலை வசூலிக்கப்பட்டது. இந்தாண்டு அது தவிர்க்கப்பட்டுள்ளது. சஷ்டி மண்டபம் முன்பு பக்தர்கள் தங்க வசதியாக தகரமேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் ஈரத் துணிகளை உலர்த்த கொடிக் கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விரத பக்தர்களுக்கு இடையூறின்றி, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் செல்ல ஒருவழிப்பாதை அமைத்துள்ளோம். நெரிசலை தவிர்க்க மூலஸ்தானத்தில் கட்டணம் மற்றும் பொது தரிசன பக்தர்களுக்கு தலா 2 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.விரத பக்தர்களுக்கு தினமும் மதியம் தினை மாவு பிரசாதம் வழங்கப்படும். இந்தாண்டு அளவை அதிகரித்து, பாக்கெட்டுகளில் வழங்கப்படுகிறது. அனைத்து பணியாளர்களும் நடை சாத்தப்படும் வரை பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், அடிப்படை வசதிகளுக்கும், போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூடுதல் போலீசாரை நியமித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.
சண்முகார்ச்சனை
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 11:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் சண்முகார்ச்சனை நடக்கிறது. சஷ்டி திருவிழாவில் நவ.2 முதல் நவ. 7வரை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பதினாறு வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடக்கிறது. பின்பு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளி, எலுமிச்சை, தேங்காய், தயிர் சாதம், வடை படைக்கப்படுகிறது.