பந்தல்குடி கால்வாய் 3 ஆண்டுகளாக துார்வாரப்படாததே வெள்ளத்திற்கு காரணம் அ.தி.மு.க., குற்றச்சாட்டு
மதுரை : ''மதுரை பிபீகுளம், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததற்கு பந்தல்குடி கால்வாய் 3 ஆண்டுகளாக துார்வாரப்படாததே காரணம்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டினார்.மதுரையில் தொடர் மழையால் செல்லுார், நரிமேடு உள்ளிட்ட பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், பால், உணவு ஆகியவற்றை டாக்டர் சரவணன் வழங்கினார். கவுன்சிலர்கள் மாணிக்கம், மாயத்தேவன் உடன் இருந்தனர்.சரவணன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையால் கடந்த வாரம் சென்னை தத்தளித்தது. இந்த வாரம் மதுரை தத்தளிக்கிறது. பழனிசாமி ஆட்சியில் ஏரி, கண்மாயை துார்வாரியதால் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படவில்லை.தற்போது மூன்றரை ஆண்டுகளில் தி.மு.க., அரசு குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தவில்லை. பல்வேறு கண்மாய்களில் இருந்து செல்லுார் கண்மாய்க்கு நீர்வரத்து வருகிறது. இக்கண்மாய் மூலம் பந்தல்குடி கால்வாய் வழியாக தண்ணீர் வைகை ஆற்றுக்கு செல்லும்.ஆனால் இந்த பந்தல்குடி கால்வாயை 3 ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை, ஏற்கனவே பந்தல்குடி கால்வாய்க்கு சுவர் எழுப்பி, மராமத்து செய்ய 2021-22ம் நிதி ஆண்டில் ரூ.75 கோடி மதிப்பீடு செய்தார்கள். அதைதொடர்ந்து 2022-23ம் ஆண்டில் ரூ.85 கோடி மதிப்பீடு செய்தார்கள். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. பந்தல்குடி கால்வாயில் சுற்றுச்சுவர் எழுப்பி இருந்தால் அதில் விழுந்து ஒருவர் இறந்திருக்க மாட்டார்.ஆனால் தொடர்ந்து தி.மு.க., அரசு மெத்தன போக்கை கடைப் பிடித்து வருகிறது. இந்த அரசு நம்மை காப்பாற்றாது என்று மக்கள் பாதுகாப்பு இடத்துக்கு சென்று விட்டார்கள்.தொடர்ந்து மழையால் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.