விவசாய மின் இணைப்பு தனியார் மில்லுக்கு தாரை வார்ப்பா
மேலுார்: கீழையூர் மின்வாரியத்துறையினர் குழிச்சேவல் பட்டியில் உள்ள விவசாயி களின் மின் இணைப்பை துண்டித்து விட்டு, தனியார் மில்லுக்கு இணைப்பு கொடுத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கீழவளவு ஊராட்சி குழிச்சேவல்பட்டி கிராமத்திற்கு கீழையூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து 25 வருடங்களுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், மின்மோட்டார்கள், மேல்நிலைத் தொட்டி மற்றும் தனியார் ஆயில் மில்லுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதிகமின் இணைப்பு கொடுக்கப்பட்டதால் அடிக்கடி பழுதானது. எனவே 2 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு டிரான்ஸ்பார்மர் அமைத்தனர். அதில் விவசாய மின் மோட்டார்கள், குறைவான எண்ணிக்கையில் குடியிருப்புகள், ஆயில் மில்லுக்கு இணைப்பு கொடுத்தனர். போதிய மின்சாரம் கிடைக்காததால் 4 நாட்களுக்கு முன் விவசாயிகளின் மின் மோட்டார், குடியிருப்பு இணைப்புகளை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள், அதே டிரான்ஸ்பார்மரில் இருந்து தனியார் ஆயில் மில்லுக்கு மட்டும் இணைப்பு கொடுத்துள்ளனர். அப்பகுதி விவசாயி இளங்கோ கூறியதாவது: ஆயில் மில்லுக்கு மின் இணைப்பு கொடுத்தது குறித்து மின்வாரிய உதவிப் பொறியாளர், உதவி இயக்குனரிடம் நேரிலும், அலைபேசியிலும் தொடர்பு கொண்ட போதெல்லாம், உடனே சரி செய்வதாக கூறி அலைக்கழிக்கின்றனர். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம், கரும்புக்கு ரூ.2 லட்சம் கடன் பெற்று சாகுபடி செய்த பயிர்கள் கருக துவங்கியுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார். செயற்பொறியாளர் கண்ணன் கூறுகையில், ''டிரான்ஸ்பார்மர் பழுது குறித்து கீழையூர் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. பழுது குறித்து தற்போதுதான் தெரிய வந்துள்ளதால் உடனே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க ஏற்பாடு செய்வோம் என்றார்.