மதுரை மாநகராட்சி முறைகேட்டில் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறது அ.தி.மு.க.,! ஆர்ப்பாட்டத்தில் பல தகவல்களை அம்பலப்படுத்த முடிவு
மதுரை; மதுரை மாநகராட்சியில் ரூ. பல கோடி வரி ஏய்ப்பு முறைகேட்டை கண்டித்து ஜூலை 8ல் ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடந்த அக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் 'இந்த முறைகேடு விசாரணையில் மாநில போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ., விசாரணை கோரி நீதிமன்றம் செல்ல' முடிவு செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சி முறைகேடு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.மாநகராட்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் கட்டடங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் தலையீட்டால் அலுவலர்கள் வரியை குறைத்து நிர்ணயம் செய்து ரூ. பல கோடி முறைகேடு செய்த வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி கமிஷனர் சித்ராவை சந்தித்து, 'இம்முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஜூலை 1ல் மனு அளித்தனர். அதன்பின் அமைதி காத்தனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ ஆலோசனை நடத்தினார். இதில் அக்கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். சில பெண் கவுன்சிலர்களுடன் அவர்களின் கணவர்களும் இருந்தனர். இதில் 'மாநகராட்சியில் நடந்த ரூ.150 கோடி முறைகேட்டை கண்டித்து ஜூலை 8ல் பெத்தானியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது' என முடிவு செய்யப்பட்டது.சோலைராஜா கூறியதாவது: இம்முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற அதிகாரி, தற்காலிக ஊழியர்கள்தான் கைதாகியுள்ளனர். முறைகேடுக்கு துணைபோன அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை இல்லை. இதையடுத்து பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவு பெற்று எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. செல்லுார் ராஜூ பங்கேற்கிறார். முறைகேட்டில் ஈடுபட்ட ஆளுங்கட்சியினரை போலீஸ் நெருங்க முடியவில்லை. இதனால் நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ., விசாரணை கோரவும் முடிவு எடுக்கப்பட்டது. வரி ஏய்ப்பு, நகரமைப்பு குழு நடத்திய கட்டட வரைபட அனுமதி முறைகேடு குறித்தும் பல தகவல்களை ஆர்ப்பாட்டத்தில் வெளியிட உள்ளோம் என்றார்.