மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் கீழமை நீதிமன்றத்தில் சி.பி.ஐ.,இறுதி அறிக்கை தாக்கல் செய்ததற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்தது. நகை திருட்டு வழக்கையும் சி.பி.ஐ., பதிவு செய்து விசாரணையை துவக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகாசி வழக்கறிஞர் மாரீஸ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது. திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். வழக்கின் விசாரணையை சி.பி.ஐ., அல்லது சிறப்பு விசாரணைக்குழுவிற்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் திருப்புவனம் வழக்கறிஞர் கார்த்திக்ராஜா உள்ளிட்ட சிலர் வெவ்வேறு நிவாரணம் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். ஜூலை 8ல் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில்,'வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. அப்போது நீதிபதிகள், 'நகை திருட்டு தொடர்பாக நிகிதா புகார் தொடர்பான வழக்கையும் சேர்த்து சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ.,விசாரணை அதிகாரி ஆக.20க்குள் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர். சி.பி.ஐ.,விசாரணை அதிகாரி டி.எஸ்.பி.,மோஹித்குமார் உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) ஐயப்பனிடம் ஜூலை 14 ல் வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (ஏ.ஏ.ஜி.,) அஜ்மல்கான், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், சி.பி.ஐ.,தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், அருண்சுவாமிநாதன், அறிவழகன், அழகுமணி, சத்தியசிதம்பரம் ஆஜராகினர். அஜ்மல்கான்: உயர்நீதிமன்ற உத்தரவின்படி↔ தொடர்ச்சி ௭ம் பக்கம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் முக்கிய 5 சாட்சிகளுக்கு சிவகங்கை நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இறுதிக்கட்ட அறிக்கை முகைதீன் பாஷா: அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில் சி.பி.ஐ.,விசாரணையை முடித்து மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் இன்று (நேற்று) ஆன்லைன் மூலம் முதற்கட்ட இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் 6 வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். 102 சாட்சிகளிடம் விசாரித்து வாக்குமூலம் பாதியப்பட்டுள்ளது. 103 சான்றாவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வழக்கில் தொடர்புடையோரின் அலைபேசி உள்ளிட்ட தொழில்நுட்ப ஆவணங்கள் டில்லி, ஐதராபாத்திலுள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவு குறித்த அறிக்கை வர வேண்டியுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னரே வழக்கில் உயரதிகாரிகள் மற்றும் வேறு நபர்களின் தொடர்புகள் உள்ளதா என்பது தெளிவாகும். உறுதியாகும்பட்சத்தில் அவர்களும் வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்படுவர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள்: அஜித்குமார் மரண வழக்கில் மட்டுமே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகை திருட்டு புகாரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை. ஏற்கனவே 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரனை கைது செய்யவில்லை.சாட்சிகளின் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அவர்களின் வீடுகளில் பாதுகாப்பான கதவுகள், எச்சரிக்கை அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பொருத்தவில்லை. நகை திருட்டு ஆவணம் முகைதீன் பாஷா: நகை திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை மாநில போலீசார் வழங்கவில்லை. ஆவணங்கள் கிடைத்ததும் விசாரிக்கப்படும். அஜ்மல்கான்: ஆவணங்களை வழங்க தமிழக அரசு தயார். சி.பி.ஐ.,தரப்பில்தான் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. நீதிபதிகள்: விசாரணையை இந்நீதிமன்றம் ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்கிறது. சாட்சிகளை அச்சுறுத்த வாய்ப்புள்ளது. சாட்சிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் விசாரணை சரியாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதில் சி.பி.ஐ.,நேர்மையாக செயல்படும் என நம்புகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: போலீஸ் காவல் விசாரணையில் அஜித்குமார் இறந்ததை மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஏற்கனவே 5 போலீசார் கைதாகியுள்ளனர். தற்போது போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ.,ஒரு மாத காலத்திற்குள் கீழமை நீதிமன்றத்தில் முதற்கட்ட இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதற்காக சி.பி.ஐ.,விசாரணை அதிகாரி டி.எஸ்.பி.,மோஹித்குமார் மற்றும் அவரது குழுவிலுள்ள அதிகாரிகளை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. விசாரணை இன்னும் முழுமையடையவில்லை. வேறு நபர்களின் தொடர்பு உள்ளதா நகை திருட்டு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,துவக்கவில்லை. அவ்வழக்கின் ஆவணங்களை போலீசார் ஒரு வாரத்திற்குள் சி.பி.ஐ.,வசம் ஒப்படைக்க வேண்டும். பின் சி.பி.ஐ.,வழக்கு பதிந்து விசாரணையை துவக்கி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முக்கிய சாட்சிகளுக்கு சிவகங்கை நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பு மற்றும் அதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து திருப்புவனம் போலீசார் ஒரு வாரத்தில் உறுதி செய்ய வேண்டும். மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைத்த பின் வழக்கில் உயரதிகாரிகள் மற்றும் வேறு நபர்களின் தொடர்புகள் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். உறுதியாகும் பட்சத்தில் அவர்களை வழக்கில் சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்பாக போலீசாரின் துன்புறுத்தலால் காயமடைந்தவர்களுக்கு பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதி திட்டம் மூலம் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சி.பி.ஐ.,க்கு மாநில போலீசார் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விசாரணை செப்.24 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.