உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆன்மிக பயணத்திற்கு கிடைத்த அமிர்தா ரயில் பயணிகள் மகிழ்ச்சி

ஆன்மிக பயணத்திற்கு கிடைத்த அமிர்தா ரயில் பயணிகள் மகிழ்ச்சி

மதுரை: மதுரை - திருவனந்தபுரம் இடையே தினமும் இயக்கப்பட்டு வந்த 'அமிர்தா' ரயில் (16343/16344), தற்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள், குறிப்பாக ஆன்மிக பயணம் மேற்கொள்வோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரம் சென்ட்ரல் - பாலக்காடு இடையே மாதா அமிர்தானந்தமயி பெயரில், 2001 ஜன., 1ல் 'அமிர்தா' ரயில் இயக்கப்பட்டது. 2015ல் பொள்ளாச்சி வரை, 2017ல் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு தினமும் காலை 9:55 மணிக்கு மதுரை வந்த இந்த ரயில்,மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றது. இதன் பெட்டிகள் 6 மணி நேரம் மதுரையிலேயே நிறுத்தி வைக்கப்படுவதால்ராமேஸ்வரம் வரை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அக். 16 முதல் இந்த ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுவதாகரயில்வே வாரியம் அறிவித்தது.இதன்மூலம் கேரளாவில்இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து ரயிலில் வந்த பயணிகள் சிலர் கூறியதாவது: செலவு, அலைச்சல் குறைவு வில்சன், திருச்சூர்: சுற்றுலா தலமான ராமேஸ்வரம் செல்ல முன் இந்த ரயிலில் மதுரை வந்து, மாட்டுத்தாவணி சென்றுபஸ்களில் பயணம் மேற்கொள்ளும் நிலை இருந்தது. தற்போது ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயணச் செலவு, அலைச்சல் குறைந்து பயனுள்ளதாக இருக்கிறது. கூடுதல் ரயில் சேவை பாலு, மதுரை: மதுரை - ராமேஸ்வரம் இடையே காலை 6:50 மணிக்குப் பின் மதியம் 1:50 மணிக்கே ரயில் உள்ளது. இடைப்பட்ட நேரத்தில் ரயில் சேவை இல்லாமல் பயணிகள் பஸ்களை நம்பியிருந்தனர். தற்போது நீட்டிப்பு செய்யப்பட்ட இந்த ரயிலால் ராமேஸ்வரம் செல்ல கூடுதல் ரயில் கிடைத்துள்ளது. ஆன்மிகவாசிகளுக்கு வரப்பிரசாதம் செல்வி, மதுரை: நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ரயில் மூலம் தென்தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா வருவோர் மதுரை மீனாட்சியை தரிசித்த பின் ராமேஸ்வரம் செல்கின்றனர். அவ்வகையில் அமிர்தா ரயில் நீடிப்பு ஆன்மிகவாசிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பெரும் பாக்கியம் சுகந்தா, கொல்லம்: அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன் முதலாக ராமேஸ்வரம் வந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். திருவனந்தபுரம் - ராமேஸ்வரம் ரயில் சேவையை பெரிதும் வரவேற்கிறேன். மகிழ்ச்சியளிக்கிறது சந்திரன், கோழிக்கோடு: புனித தலமான ராமேஸ்வரத்திற்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பாதுகாப்பாகவும், அமைதியுடன் பயணித்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. எந்த சிரமமும் இன்றி ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. திருப்தியான பயணம் சிவன், கொல்லம்: முதன் முதலாக ராமேஸ்வரம் கோயிலுக்கு ரயிலில் பாதுகாப்பாக பயணித்து வந்திறங்கியது மனதிற்கு திருப்தி. கேரள மக்கள் எளிதாக ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய வசதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ