விவசாயிகள் விரோத கொள்கைகள் தமிழகத்தில் டிசம்பரில் பிரசாரம்
மதுரை: தமிழக அரசின் விவசாய, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து, டிசம்பரில் தமிழகம் தழுவிய பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக மதுரையில் நடந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு தென் மண்டல தலைவர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். மதுரை மண்டல தலைவர் மதுரைவீரன், மாவட்ட தலைவர் மணிகண்டன், மாநில கவுரவ தலைவர் ராமன், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் ஆதிமூலம், மாநில இளைஞரணி தலைவர் அருண் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது: 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க., 2021க்கான தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மதுரையில் வேளாண் பல்கலை அமைக்கவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு டங்ஸ்டன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு தற்போது தெரிவித்தாலும் தேர்தலுக்கு பின் நடைமுறைப்படுத்தலாம் என்ற ஐயம் உள்ளது. திட்டம் வராது என்பதை அரசிதழில் வெளியிட்டு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் 1975ல் இந்தியாவிலேயே முதன் முதலாக கொள்முதல் செய்யும் கொள்கை முடிவை அப்போதைய முதல்வர் கருணாநிதி செயல்படுத்தினார். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், மதுரையில் 10 இடங்களில் தனியாருக்கு கொள்முதலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை தடுக்க வேண்டும். தமிழக அரசின் விவசாய, விவசாயிகள் விரோத கொள்கைகளை விவசாயிகளிடம் எடுத்துரைத்து டிசம்பரில் தமிழகம் தழுவிய பிரசார பயணம் மேற்கொள்ளப்படும் என்றார். தென்மாவட்ட நிர்வாகிகள் இரும்புதுரை, ஆபிரகாம், ராஜாங்கம், ராமலிங்கம், தவம், துரைசாமி கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.