திருப்பதி கோவிலில் பேனர் வைத்த அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு முன்ஜாமின்
மதுரை: ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவில் முன், '2026 தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய, 'பிளக்ஸ் பேனரை' பிடித்தவாறு, வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் இருவருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் அனுமதித்தது. மதுரையை சேர்ந்தவர் கஜமுருகன்; அ.தி.மு.க.,பேச்சாளர். திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி அ.தி.மு.க., மாணவரணி செயலர் பாலமுருகன். இருவரும், டிச., 16ல் திருப்பதி, திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் முன், 'ஏழுமலையான் ஆசியுடன், 2026 தேர்தலில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பிளக்ஸ் பேனரை பிடித்தவாறு, வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அக்கோவில் வளாகத்தில் அரசியல் நடவடிக்கைகள் தடை செய்யப்படுள்ளதை மீறி, உள்நோக்குடன் பிளக்ஸ் வைத்ததாக திருப்பதி, திருமலை டவுன் 1 போலீசார் வழக்கு பதிந்தனர். கஜமுருகன், பாலமுருகன் இருவரும், 'நாங்கள் அப்பாவிகள். வழக்கில் தவறாக எங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தனர். நீதிபதி எம்.ஜோதிராமன் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பாரதி கண்ணன் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'இடைக்கால முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர்கள் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்து முன்ஜாமின் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்றார்.