‛ராகிங் செயல்பாடுகளில் இருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும் ஏ.எஸ்.பி., அன்ஷுல் நாகர் அறிவுரை
மதுரை: ''மனம் அல்லது உடல் ரீதியாக துன்புறுத்தும் 'ராகிங்' செயல்களில் இருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும்'' என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்ச்சியில் ஏ.எஸ்.பி., அன்ஷுல் நாகர் அறிவுரை வழங்கினார்.அவர் பேசியதாவது:ஒருவரை மனம் அல்லது உடல் ரீதியாக துன்புறுத்துவதே ராகிங். இது தற்கொலைக்கு வழிவகுக்கும். ராகிங் செய்வது ஒழுக்கக்கேடான செயல் மட்டுமின்றி சட்டப்படி குற்றமாகும். எனவே இதுபோன்ற செயல்களில் இருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும். கல்லுாரியில் சீனியர்களும் ஜூனியர்களும் நட்புடன் பழக வேண்டும்.போதை பொருட்கள் மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்துபவை. 2024ல் நாடு முழுதும் 3.1 கோடி பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தினர். அதில் 8.6 லட்சம் பேர் 10 முதல் 17 வயதிற்குட்பட்ட சிறார்கள். போதைப் பொருள் தடுப்பில் சிறந்து விளங்கும் முதல் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.போதைப் பொருள் வியாபாரிகள் பள்ளி, கல்லுாரி மாணவர்களையே குறிவைக்கின்றனர். அவ்வாறு யாரேனும் அணுகினால் போலீசாரிடம் தகவல் அளிக்க வேண்டும் என்றார். மாணவர்கள் போதை பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர்.சைபர் குற்றங்கள் குறித்து எஸ்.ஐ., கார்த்திகேயன் பேசியதாவது:தற்போது டிஜிட்டல் கைது, கடன் வழங்கும் 'ஆப்' கள், ஆபாச மின்னஞ்சல்கள் ஆகியவற்றின் மூலமே அதிக சைபர் குற்றங்கள் நடைபெறுகின்றன. வயதானோர், உயர்பதவியில் உள்ளவர்களை குறிவைத்து டிஜிட்டல் கைது நடக்கிறது. வட மாநிலங்களில் சைபர் குற்றங்களில் ஈடுபட பயிற்சி வழங்குகின்றனர்.நிதி மோசடிகளை தவிர்க்க யாரிடமும் ஓ.டி.பி., வங்கிக்கணக்கு விபரங்கள் கொடுப்பது, தேவையில்லாத இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டோர் 3 மணி நேரத்திற்குள் 1930 என்ற கட்டணமில்லா எண்ணிலோ www.cybercrime.gov.inஎன்ற தளத்தில் புகார் அளித்தால் பாதிப்பில் இருந்து மீளமுடியும்.பெண்களின் போட்டோக்களை உருமாற்றம் செய்து இணைய உலகில் பரவவிட்டு அவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கின்றனர். அத்தகைய போட்டோக்களை பதிவிடப்பட்ட தளத்தின் விபரங்களுடன் www.stopncii.org என்ற தளத்தில் புகார் அளித்தால் இணைய உலகில் எங்கெல்லாம் உருமாற்றம் செய்யப்பட்ட போட்டோ உள்ளதோ அவையெல்லாம் அழிக்கப்பட்டுவிடும். அனைவரும் 'காவலன் எஸ்.ஓ.எஸ்.' செயலியை பயன்படுத்த வேண்டும் என்றார்.கல்லுாரி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, புத்தாக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.